எனக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலமாக திட்டமிட்ட பிரசாரம்: செல்வம் எம்.பி
காலைக்கதிர் எனும் இணையவழி மஞ்சள் ஊடகம் 11-11-2025 வெளியிடப்பட்ட வெளியீட்டில் எனது பெயரைக் குறிப்பிட்டு நான் கைது செய்யப்படுவது உறுதி என செய்தி வெளிட்டுள்ளனர்.
இணையவழி ஊடக வாயிலாகவும், போலியான முகநூல் கணக்கினூடாகவும், யூடியுப் ஊடாவும் சட்டத்தை கையில் எடுத்து என்னைப்பற்றி தவறான செய்தியை வெளியிடுவது எனக்கு பாரதூரமான களங்கத்தை ஏற்படுத்துகிறது. உண்மையற்ற, ஆதாரமற்ற பொய்யான இச்செய்திகளை வேண்டுமென்றே பரப்பும் இவ்வாறான செயல் எனது பாரளுமன்ற சிறப்புரிமையை மீறும், அவமதிக்கும் நடவடிக்கையாக உள்ளதால் இதுதொடர்பில் கவனத்தில் எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் வலியுறுத்தினார்
பாராளுமன்றத்தில் 13-11-2025 அன்று நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, என்னைப் பற்றிய உண்மைக்குப் புறம்பான செய்திகளை, இணையவழி ஊடக வாயிலாகவும், போலியான முகநூல் கணக்கினூடாகவும், யூடியுப் ஊடாவும் எனது பெயருக்கும், பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் கடந்த சில வாரங்களாக சில தனி நபர்களாலும் ஐ.பி.சி எனப்படும், ஊடகத்தாலும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
தற்கொலை செய்து இறந்த ஒருவரது மரணத்தை என்னுடன் சம்பந்தப்படுத்தி, கொலை செய்யப்பட்டார் என பொய்ப் பிரசாரம் செய்யப் படுகிறது.மேலும் பொய்யான தனித்தனியாக, துண்டு துண்டாக பதிவு செய்யப்பட்ட தொலை பேசி உரையாடல் குரல் பதிவுகளை, வெட்டியும் ஒட்டியும் திரிபு படுத்தியும் தவறாக சித்திரித்தும் எனக்கு எதிராக பயன்படுத்தி போலி முகநூல்களில் பரப்பபட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு முகநூல்களில் பதிவேற்றியமையால் எனது கௌரவத்திற்கும், தனிப்பட்ட மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் பொது மக்கள் மத்தியிலும், அரசியல் பரப்பிலும்,சர்வதேச மட்டத்திலும் பங்கம் விளைவிப்பதோடு தவறான தோற்றப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. இதனால் நான் பெரிதும் மன உளைச்சலுக்கும் துன்பத்துக்கும் ஆளாகியுள்ளேன்.
யாழ்ப்பாணம் நகரத்தில், பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இயங்கி வரும் பிரித்தானிய, லண்டன் நகரை பதிவாக கொண்ட, இணையவழி ஊடகம் சில தனி நபர்களை அழைத்து எனக்கு எதிரான மேற்கூறிய கருந்துக்களை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளது
இவ்வூடகத்திற்கு பாதுகாப்பு தரப்பினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அனுமதி இல்லாமல் இந்த ஊடகம் இயங்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.அத்துடன் காலைக்கதிர் எனும் இணையவழி மஞ்சள் ஊடகம் 11-11-2025 வெளியிடப்பட்ட வெளியீட்டில் எனது பெயரைக் குறிப்பிட்டு நான் கைது செய்யப்படுவது உறுதி என செய்தி வெளிட்டுள்ளனர்.
இவ்வாறான பொய்யான தகவல்கள் பாராளுமன்ற சிறப்புரிமையினை (பாராளுமன்ற சிறப்புரிமை அதிகார சட்டம் ) சட்டத் 22 (2) பிரிவினை மீறும் செயற்பாடாகும் இவ்வாறான சட்டமீறல் குற்றவியல் தண்டனைகோவை சட்டத்தின் 90 ஆவது பிரிவினை மீறுகிறது என்பதனையும் அதனமூலம் மேல் நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டிய குற்றமாகும்.
இவர்கள் சட்டத்தை கையில் எடுத்து தவறான செய்தியை வெளியிடுவது பாரதூரமான களங்கத்தை எனக்கு ஏற்படுத்துகிறது உண்மையற்ற,ஆதாரமற்ற பொய்யான இச்செய்திகளை வேண்டுமென்றே பரப்பும் இவர்களின் செயல் எனது பாரளுமன்ற சிறப்புரிமையை மீறும், அவமதிக்கும் நடவடிக்கையாக உள்ளதால், மேற்படி விடயத்தினை சிறப்புரிமை குழுவிற்கு ஆற்றுப்படுதி எனக்கு நீதி வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன் என்றார்.





