'ஒரே சீனா' கொள்கைக்கான உறுதியான ஆதரவை மீள உறுதிப்படுத்திய இலங்கை
சமீபத்திய மோசமான வானிலை நிலையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட உதவிகள் உட்பட, இலங்கைக்கு சீனா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு அமைச்சர் விஜித ஹேரத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 2758 ஆவது தீர்மானத்திற்கு இணங்க, ஒட்டுமொத்த சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டபூர்வமான அரசாங்கமாக சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்தை அங்கீகரிப்பதாகத் தெரிவித்து, 'ஒரே சீனா' கொள்கைக்கான தனது உறுதியான ஆதரவை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது.
தித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்படக்கூடிய சீன உதவிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சீனத் தூதுவர் சி சென்ஹொங் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
சமீபத்திய மோசமான வானிலை நிலையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட உதவிகள் உட்பட, இலங்கைக்கு சீனா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு அமைச்சர் விஜித ஹேரத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். அத்துடன் 'ஒரே சீனா' கொள்கையில் கொழும்பின் நிலையான நிலைப்பாட்டையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது பேரிடருக்குப் பிந்தையத் தேவைகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட வேண்டிய பன்முகத் துறை சார்ந்த ஆதரவுகள் குறித்தும் ஆராயப்பட்டதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.





