சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியின் கடிதம் குறித்து அவதானம்
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோருக்கு கடந்த ஜுலை மாதம் அனுப்பிவைக்கப்பட்ட இக்கடிதம் தொடர்பில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ஷ அவரது மனைவியின் ஊடாக கடந்த வாரம் மீண்டும் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை அனுபவித்துவரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியினால் கடந்த ஜுலை மாதம் தமக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அக்கடிதம் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பிரத்யேக செயலாளர் அறிவித்துள்ளார்.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தார். அவற்றின் பிரதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
அக்கடிதத்தில் 7 ஆம் இராணுவக் காலாட்படைத் தலைமையகத்தில் படுகொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தினரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர தனது கணவர் வேறெந்தக் குற்றத்தையும் புரியவில்லை எனவும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோருக்கு கடந்த ஜுலை மாதம் அனுப்பிவைக்கப்பட்ட இக்கடிதம் தொடர்பில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ஷ அவரது மனைவியின் ஊடாக கடந்த வாரம் மீண்டும் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பிவைத்திருந்தார்.
செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் 'மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தினர் ஜனாதிபதியிடம் முன்வைக்கும் மேன்முறையீடு எனும் தலைப்பின்கீழ் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அக்கடிதம் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அறியத்தருகிறோம்' என அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பிரத்யேக செயலாளர் லஹிரு சமரசிங்கவினால் அனுப்பிவைக்கப்பட்ட பதில் கடிதம் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரமவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெற்றுள்ளது.





