டக்ளஸ் தேவானந்தா கைது: இன்று நீதிமன்றில் முன்னிலை
பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி எவ்வாறு பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவரின் கைக்குச் சென்றது கேள்விகளைத் தொடுத்திருந்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதபடுகொலைகள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் 26-12-2025 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா அமைச்சுப்பதவியை வகித்தபோது, அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்கான பயன்படுத்துவதற்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன. அவை மீண்டும் பாதுகாப்பு அமைச்சிடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அத்துப்பாக்கிகளின் விபரங்களில் தெளிவின்மை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதபடுகொலைகள் தொடர்பான விசாரணைப் பிரிவு விசாரணைக்கு அழைத்திருந்தது.
துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளியான 'மாகந்துரே மதுஷ்' என்பவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு வெலிவேரிய பகுதியில் பற்றைகள் நிறைந்த கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கியின் தொடர் இலக்கம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியின் தொடர் இலக்கத்துடன் ஒத்துப்போயிருந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விரிவான விளக்கத்தை டக்ளஸ் தேவானந்தவிடத்தில் விசாரணையின் போது கோரியிருந்தனர்.
பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி எவ்வாறு பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவரின் கைக்குச் சென்றது கேள்விகளைத் தொடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கி டக்ளஸிடமிருந்து காணாமல் போன முறைமை, அல்லது கைமாற்றப்பட்ட விடயம் சம்பந்தமாக குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரிகளால் கேட்கப்பட்ட வினாக்களுக்கு போதுமான விளக்கங்கள் கிடைக்காமையின் காரணத்தினால் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்வதற்கு அதிகாரிகள் தீர்மானித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆயுதங்களை மீள கையளித்த விடயத்தில் காணப்பட்ட தெளிவின்மைத் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தா அரச துப்பாக்கி தொடர்பில் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டமை மற்றும் குற்றவாளிகளின் கைக்கு செல்ல இடமளித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவை 27-12-2025அன்று கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதபடுகொலை விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





