தனி கட்சியின் அரசியல் கொள்கை பற்றி பேசுவதில் என்ன பிரச்சினை: பிரதமர் கேள்வி
பத்தரமுல்ல கட்சி காரியாலயத்தில் கூடி அரசாங்கம் தீர்மானங்களை எடுப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.ஆம் நாங்கள் எமது கட்சி காரியாலயத்தில் கூடி அரசியல் கொள்கை, பொது கொள்கை பற்றி பேசுகிறோம்.
ஆட்சியில் இருக்கும் கட்சி உறுதியானதாக இருக்க வேண்டும். அப்போது தான் அரசாங்கத்தால் பலமாக செயற்பட முடியும். பல கட்சி முறைமை உள்ள நிலையில் தனி கட்சியின் அரசியல் கொள்கை பற்றி பேசுவதில் என்ன பிரச்சினை உள்ளதென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய எதிர்க்கட்சிகளிடத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்
பாராளுமன்றத்தில் 15-11-2025 அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், உயர்நீதிமன்றம் ,அரச அலுவலகங்கள் ,பாராளுமன்றம்,மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சியினர் மக்களுக்கு பயனடையும் வகையில் யோசனைகள் மற்றும் திருத்தங்களை முன்வைக்கவில்லை. மாறாக குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைத்தார்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லும் என்று குறிப்பிட்ட எதிர்தரப்பினர் இன்று திறைசேரியின் கையிறுப்பு நிரம்பியுள்ளது என்று குறிப்பிடும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம் என்பதை எதிர்க்கட்சியினர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
முன்பள்ளி கல்வி அறிவு இருப்பவர்களால் கூட திறைசேரியின் கையிருப்பை அதிகரிக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் எமக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரச தலைவர்களுக்கு முன்பிள்ளை கல்வி அறிவு இருக்கவில்லையா, என்று கேட்கிறோம்.பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு சிறந்த தீர்மானங்களை நாங்கள் எடுத்துள்ளோம்.அதனால் தான் திறைசேரியின் கையிப்பு இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல கட்சி காரியாலயத்தில் கூடி அரசாங்கம் தீர்மானங்களை எடுப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.ஆம் நாங்கள் எமது கட்சி காரியாலயத்தில் கூடி அரசியல் கொள்கை, பொது கொள்கை பற்றி பேசுகிறோம்.
கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை பயன்படுத்திக் கொள்கிறோம். அரச நிர்வாக கட்டமைப்பில் கட்சி கொள்கையை நாங்கள் கொண்டு வரவில்லை. கட்சிக்கு சென்று, ஒன்றிணைந்து பேசுவதில் என்ன பிரச்சினை உள்ளது.
ஆட்சியில் இருக்கும் கட்சி உறுதியானதாக இருக்க வேண்டும். அப்போது தான் அரசாங்கத்தால் பலமாக செயற்பட முடியும். கட்சியின் கொள்கை, அரச கொள்கை மற்றும் அரசாங்க கொள்கையை எம்மால் வேறுப்படுத்திப் பார்க்க முடியும். பல கட்சி முறைமை உள்ள நிலையில் தனி கட்சியின் அரசியல் கொள்கை பற்றி பேசுவதில் என்ன பிரச்சினை உள்ளது என்றார்.





