பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படாது: மஹிந்த ஜயசிங்க
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமற்றது என்ற அதிபர் தொழிற்சங்கத்தினர் குறிப்பிடுகிறார்கள்.
பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்குமாறு கட்சி அழுத்தம் பிரயோகித்ததாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. கல்வி மறுசீரமைப்பை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள் என பிரதி மைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
புதிய கல்வி மறுசீரமைப்பை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள எதிர்ப்புக்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய பாடத்திட்டத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் ஒருதரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள். புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.
கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை தயாரிக்கும் போது வரலாறு பாடத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். உண்மையை வெளிப்படுத்தியவுடன் அமைதியாக இருந்தார்கள்.
6 ஆம் தர மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பில் முறையற்ற வகையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார். உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
புதிய கல்வி மறுசீரமைப்பை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுவது தெளிவாக விளங்குகிறது. பாடசாலைகளில் முழுமையாள வளங்கள் இல்லை, ஆகவே புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமற்றது என்ற அதிபர் தொழிற்சங்கத்தினர் குறிப்பிடுகிறார்கள்.இவர்கள் கடந்த காலங்களில் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை.
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது மிகவும் மோசமான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் எதிர்க்கட்சியினர் முன்வைக்கிறார்கள். விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் புத்தகம் அச்சிடும் போது சகல பக்கங்களையும் வாசிப்பதில்லை என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள்.இருப்பினும் தமது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அதனை ஏற்க மறுக்கிறார்கள்.
பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்குமாறு கட்சி அழுத்தம் பிரயோகித்ததாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இணக்கமாகவே செயற்படுகிறார்கள். அமைச்சர்களுக்கு இடையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என்றார்.





