வரவு- செலவுத்திட்ட சுற்றறிக்கை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியீடு
சேத மதிப்பீடு இல்லாமல் இழப்பீடு பெற விருப்பம் தெரிவிக்கும் வணிக உரிமையாளர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா, சேத மதிப்பீட்டுக்குப் பிறகு இழப்பீடு பெற விருப்பம் தெரிவிக்கும் வணிக கட்டிட உரிமையாளருக்கு அதிகபட்ச கொடுப்பனவாக 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு 2025.12.05 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை மூலம் முன்மொழியப்பட்ட வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் திறமையாகவும், திறம்படவும் செயற்படுத்துவதற்காக புதிய சேர்த்தல்கள், தெளிவுப்படுத்தல்கள் மற்றும் திருத்தங்களை உள்ளடக்கிய வகையில் வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், வணிக கட்டிட உரிமையாளர்கள், வீட்டு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் மத தலங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை விபரங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய கடந்த 05 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் 3,5,6,7,9,11,12 மற்றும் 14 ஆகிய தொடர்கள் புதிய சுற்றறிக்கை ஊடாக திருத்தப்பட்டுள்ளன.
மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்த அல்லது நிரந்தர வாழ்வாதாரத்தை தொடர முடியாத குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 3 மாத காலங்களுக்கு 25 ஆயிரம் ரூபா உதவித்தொகை ( 02 அல்லது அதற்கு குறைவான உறுப்பினர்களை கொண்டிருத்தல்), 50 ஆயிரம் ரூபா (02 உறுப்பினர்களுக்கு மேலதிகமான உறுப்பினர்களை கொண்டிருத்தல்) வழங்கப்படும்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நெல், தானியம், சோளம், வேர்க்கடலை மற்றும் களப் பயிர் சேதம் அல்லது மீள் நடுகைக்காக ஒரு முறை மாத்திரம் ஒரு ஹெக்டயாருக்கு 150,000 ரூபா வழங்கப்படும்.
அதேபோல் காய்கறி, மிளகாய்,வெங்காயம் மற்றும் வாழைப்பழம், பப்பாசி,அன்னாசி போன்ற பழப் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு அல்லது மீள்நடுகைக்கு ஒருமுறை மாத்திரம் 150,000 ரூபா வழங்கப்படும். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணைகளில் இறந்த விலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் (பதிவு செய்யப்பட்ட பண்ணையாளர்களுக்கு மட்டும்) கொடுப்பனவு வழங்கப்படும்.
அதற்கமைய கால்நடை வளர்ப்பில் (கலப்பின) இறந்த விலங்கு ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபா,அதிகபட்சம் 10 விலங்குகளுக்கு 20 இலட்சம் ரூபா, கால்நடை வளர்ப்பில் (உள்ளூர்) இறந்த விலங்கு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபா, அதிகபட்சம் 20 விலங்குகள் வரை உயிரிழந்திருந்தால் 10 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும். இறந்த விலங்கு ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபா, அதிகபட்சம் 20 விலங்குகள் வரை உயிரிழந்திருந்தால் 4 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
இறந்த விலங்கு ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபா,20 விலங்குகள் வரை உயிரிழந்திருந்தால் 4 இலட்சம் ரூபா வழங்கப்படும். இறந்த கோழி (லேயர்) ஒன்றுக்கு 500 ரூபா என்ற அடிப்படையில் அதிகபட்ச கொடுப்பனவாக 10 இலட்சம் வரை வழங்கப்படும். பொய்லர் கோழி ஒன்றுக்கு 250 ரூபா என்ற வகையில் 10 இலட்சம் ரூபா வரை வழங்கப்படும். அதேபோல் வீட்டுக் கோழி வளர்ப்பில் அலகொன்றுக்கு ஒரு முறை மாத்திரம் 10 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.
சேதமடைந்த மீன்பிடித் தொழிலை கட்டியெழுப்பல்
அனர்த்தத்தினால் சேதமடைந்த உவர் நீர் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தப்படும் படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த மீன்பிடி படகுக்கு பெறப்பட்ட காப்புறுதி இழப்பீட்டை சீனோர் நிறுவனத்துக்குச் செலுத்துவதற்குட்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் புதிய படகுகள் வழங்கப்படும்.
பகுதியளவில் சேதமடைந்த மீன்பிடி படகுகள் சீனோர் நிறுவனத்தின் மூலம் பழுதுபார்க்கப்படும்.மீன்பிடி வலைகளை இழந்த மீனவர்களுக்கு வலைகளை கொள்வனவு செய்வதற்காக நோர்த் சீ லிமிடெட் ஒரு முறை மாத்திரம் ஒரு மீனவருக்கு 1 இலட்சம் ரூபா பெறுமதியான கூப்பன் பத்திரம் ஒன்று வழங்கும்.
முழுமையாக சேதமடைந்த படகுக்கு (நன்னீர் மீன்பிடி நடவடிக்கை) ஒரு மீனவருக்கு ஒருமுறை மாத்திரம் 1 இலட்சம் ரூபா வழங்கப்படும். பகுதியளவில் சேதமடைந்த படகு சீனோர் நிறுவனத்தின் மூலம் பழுதுபார்க்கப்படும். அதேபோல் சேதமடைந்த வலைக்கு ஒரு மீனவருக்கு அதிகபட்சமாக 5 வலைகள் என்ற அடிப்படையில் சேதமான வலைக்கு 15 ஆயிரம் ரூபா, அதிகபட்சமாக 75 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
சேத மதிப்பீடு இல்லாமல் இழப்பீடு பெற விருப்பம் தெரிவிக்கும் வணிக உரிமையாளர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா, சேத மதிப்பீட்டுக்குப் பிறகு இழப்பீடு பெற விருப்பம் தெரிவிக்கும் வணிக கட்டிட உரிமையாளருக்கு அதிகபட்ச கொடுப்பனவாக 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
முழுமையாக சேதடைந்து, மண்சரிவு அபாயம் காரணமாக வசிக்கத் தகுதியற்றதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 50 இலட்சம் ரூபா, பகுதியளில் சேதடைந்த வீடுகளை புனரமைக்க 25 இலட்சம் ரூபா, சேத மதிப்பீடு இல்லாமல் இழப்பீடு பெற விரும்புபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா,சேத மதிப்பீட்டுக்குப் பிறகு இழப்பீடு பெற விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மதிப்பிடப்பட்ட பெறுமதியின் அடிப்படையில் அதிகபட்ச இழப்பீடாக 25 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
அனர்த்தத்தினால் சேதமடைந்த மத தலங்களை துப்பரவு செய்தல் மற்றும் மறுசீரமைப்பு செய்வதற்கு 25 ரூபா ஒருமுறை கொடுப்பனவு மத விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தினால் வழங்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைய புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்படும்.





