வெனிசுவேலா – அமெரிக்கா விவகாரத்தில் ஐ.நா. சபை உடன்படிக்கைக்கு அமைவாக நடவடிக்கை வேண்டும்: அமைச்சர் விஜித ஹேரத்
வெனிசுவேலா – அமெரிக்கா விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைக்கு அமைவாகவும், சர்வதேச சட்டங்களுக்கு ஏற்பவும் நாட்டின் சுயாதீனத்தை பாதுகாக்கும் வகையில் கட்டாயம் செயற்பட வேண்டும்.
அடிப்படை உடன்படிக்கை, அடிப்படை கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான இந்த செயற்பாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை ஊடாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என வெளிவிவகாரத்துறை, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 04-01-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெனிசுவேலாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் மற்றும் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, வெனிசுவேலா – அமெரிக்கா விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைக்கு அமைவாகவும், சர்வதேச சட்டங்களுக்கு ஏற்பவும் நாட்டின் சுயாதீனத்தை பாதுகாக்கும் வகையில் கட்டாயம் செயற்பட வேண்டும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு அமைவாக செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சகல நாடுகளும் கட்டுப்பட்டுள்ளன. அதற்கமைவாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டம் இன்று கூடவுள்ளது.
இவ்விடயத்தை விரைவுப்படுத்துமாறு இலங்கை சார்பில் யோசனைகளை முன்வைக்கவுள்ளோம். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் அடிப்படை உடன்படிக்கை, அடிப்படை கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு எதிரான இந்த செயற்பாட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றார்.





