ஷிசாங் பிராந்தியத்துடன் பௌத்தம் சார்ந்து செயற்பட எதிர்பார்ப்பு: அமைச்சர் பிமல் ரத்நாயக்க
இலங்கை நெருக்கடியாக இருக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் சீனா முதல்நாடாக தாமாக முன்வந்து உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றது.
சீனாவின் ஷிசாங் பிராந்தியத்துடன் சுற்றுலாத்துறை, வரலாற்றுப் பின்னணி நிறைந்த பௌத்தம் ஆகிய விடயப்பரப்புக்களில் கூட்டிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்
இலங்கைக்கு இரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்செங் தலைமையில் 20ஆவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வு குறித்த விளக்கவுரையை வழங்கும் நிகழ்வு 23-12-2025 அன்று ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; எனது தலைமையிலான இலங்கையின் தூதுக்குழு அண்மையில் சீனாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அபிவிருத்தி திட்டங்கள், வறுமை ஒழிப்பு, நவீன தொழில்நுட்ப உள்ளீர்ப்பு, டிஜிட்டல் மயமாக்கம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு மிகவும் செம்மையாக திட்டமிடப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக நேரடியாகவே உரையாடுவதற்கும் அவதானிப்புக்களைச் செய்வதற்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.
விசேடமாக, சக்தி முகாமைத்துவம், இயற்கை வளப்பயன்பாடு, புத்தாக்க சக்தி, பூச்சி நிலை காபன் முகாமை, தொழில்துறைகளில் நவீனத்துவம், தேசிய பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் மிகவும் அவதானத்துக்கு உட்பட்டவையாக இருந்தன.
அந்தப் பின்னணியில் தற்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு திட்ட விளக்கவுரை நிகழ்வில் அனைவரும் கூடியிருப்பது மிகவும் முக்கியமான தருணமாகும். சீனாவானது தனது நட்டுக்குமட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்துக்குமான நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைமைத்துவமும் ஒருபோதும் காலனித்துவ வாதத்தையோ, படைப் பிரயோக முறைமைகளையோ பின்பற்றுவதில்லை. சமூக பொருளாதார மூலோயம் மூலமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் கூட்டாக முன்னோக்கி நகர்வதையே இலக்காக கொண்டிருக்கின்றது.
இலங்கை நெருக்கடியாக இருக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் சீனா முதல்நாடாக தாமாக முன்வந்து உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் தற்போது அனர்த்தகாலத்திலும் சீனா பல்வேறு வகையில் உதவிகளையும் வழங்கியுள்ளது.
மேலும், ஷிசாங் தன்னாட்சிப் பிரந்தியமானது, பௌத்த மதம் வேரூன்றி பகுதியாகும். அப்பிராந்தியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு தொடர்புகள் காணப்படுகின்றன. அந்த வகையில் இலங்கைக்கும், ஷிசாங் தன்னாட்சிப் பிராந்தியத்துக்கும் இடையில் பௌத்தம், சுற்றுலாத்துறை ஆகிய விடயப்பரப்புக்களில் கூட்டிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.





