பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் - கத்தோலிக்க திருச்சபை
அன்று மற்றவர்களுக்கு என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறைதான் இன்றும் நடக்கிறது.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் நாட்டில் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள ஒரு சட்டமாகும். அதில் பல மனிதநேயமற்ற அம்சங்கள் காணப்படுவதால் அது திருத்தப்பட வேண்டும் அல்லது முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமிணி தெரிவித்தார்.
மேலும் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதால், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் பிரதானிக்கு மாத்திரம் இதில் பிரத்தியேக சலுகைகள் எதனையும் வழங்க முடியாது எனவும், இந்த விவகாரங்களை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய விசாரணைக்குத் தடையாக மாற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் 09-06-2026அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்தச் சட்டம் இன்று நேற்று வந்ததல்ல, பல வருடங்களாக நாட்டில் நடைமுறையில் உள்ள ஒரு சட்டமாகும். இந்தச் சட்டத்தில் மனிதநேயமற்ற பல கொடூரமான அம்சங்கள் இருப்பதை நாங்களும் காண்கிறோம். எனவே, இந்தச் சட்டம் திருத்தப்பட வேண்டும் அல்லது முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.
ஆனால், இந்தச் சட்டம் மிகத்தீவிரமாக நடைமுறையில் இருந்த காலத்தில், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த நபர் (சுரேஷ் சலே) நாட்டின் உளவுத்துறையின் முக்கியப் பதவியில் இருந்தவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர் பதவியில் இருந்த காலத்திலும் கூட, இதே சட்டத்தின் கீழ் பலதரப்பட்ட மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அன்று மற்றவர்களுக்கு என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறைதான் இன்றும் நடக்கிறது. இது அனைவருக்கும் பொதுவாகவே நடக்கும் ஒரு செயல்முறையாகும்.
சட்டத்தின் முன்னிலையில் ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஒரு விதமாகவும், ஏனைய சாதாரண மக்களுக்கு வேறு விதமாகவும் பிரத்தியேகமாகச் செயல்பட முடியாது. சட்டம் அனைவருக்கும் சமமாகவே அமைய வேண்டும். எனவே, கைதி ஒருவருக்குச் சட்டரீதியாக நடக்கும் இந்த விவகாரங்களை முன்னிலைப்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தற்போது பாரபட்சமின்றி நகர்ந்து வரும் பிரதான விசாரணைக்கு யாரும் முட்டுக்கட்டையிடவோ அல்லது அதனைத் தடையாக மாற்றவோ முயற்சிக்கக் கூடாது என்றார்.





