சங்கீத்சன் கைது விவகாரம் - 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
வ்வாறிருப்பினும் அறிவித்தல் திரும்பும் நாளாக எதிர்வரும் 23 ஆம் திகதியைக் குறிப்பிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் 11-06-2026அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் கைது விவகாரம், எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக் கொண்ட எழுச்சிப்பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சன் (24) பயங்கரவாதத்தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் சங்கீத்சனுக்கான பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சங்கீத்சனுக்கு ஆதரவாக ஆஜரான சட்டத்தரணி கே.சயந்தன், இதுபற்றி ஊடகங்களுக்குக் கூறியதாவது:
இன்றைய தினம் (நேற்று) யாழ். மேல் நீதிமன்றத்தில் சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கான பிணை விண்ணப்பத்தை ஆதரிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்தோம். குறித்த பிணை விண்ணப்பத்தை ஆதரிக்கும்போது குறிப்பாக பொலிஸார் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த பி அறிக்கையில் உள்ள சில சட்ட முரணான விடயங்களைக் குறிப்பிட்டு, அதனடிப்படையில் சங்கீத்சனுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டுவருவதாகவும், அது பாரதூரமான நீதிப்புரள்வாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு, எனவே அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படும் பட்சத்தில் அது மேலும் நீதிப்புரள்வாக அமையும் என்பதால் எதிர்மனுதாரர்களுக்கு (சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, யாழ் மாவட்ட குற்றவிசாரணைப் பொறுப்பதிகாரி, சட்டமா அதிபர்) அறிவித்தல் அனுப்புவதை இயன்றவரை விரைவில் கட்டளைச்சேவகர் ஊடாக மேற்கொள்ளுமாறும், அறிவித்தல் திரும்பும் நாளாக நாளை தினத்தை (இன்றைய) குறிப்பிடுமாறும் நான் மன்றுக்கு விண்ணப்பம் செய்திருந்தேன்.
எவ்வாறிருப்பினும் அறிவித்தல் திரும்பும் நாளாக எதிர்வரும் 23 ஆம் திகதியைக் குறிப்பிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்தக் கைது மற்றும் தடுத்துவைப்பு தொடர்பில் நாம் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருக்கிறோம். அந்த மனு நாளைய தினம் (இன்று) அல்லது எதிர்வரும் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.





