சஷி வீரவன்சவின் 2 வருட சிறை தண்டனையை உறுதி செய்தது மேல் நீதிமன்றம்
ஆனால் நீதிவான் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைச் முழுமையாக பரிசீலினை செய்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவுக்கு எதிரான, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பெற்ற இராஜதந்திர கடவுச்சீட்டைப் தன்வசம் வைத்திருந்த குற்றத்துக்காக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை மற்றும் அபராதத்தை நீக்கி, தம்மைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரி ரணசிங்க முதியான்சேலாகே ஷிர்ஜா உதயந்தி எனும் சஷி வீரவன்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் 11-06-2026 அன்று நிராகரித்தது.
மேற்படி மனு தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன தீர்ப்பை அறிவித்தார். மேன்முறையீட்டு மனுதாரரான, குறித்த வழக்கின் பிரதிவாதிக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை உறுதி செய்வதாகத் தெரிவித்தார்.
பிரதிவாதி 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி பிறந்ததாக குறிப்பிட்டு 675320203V என்ற இலக்கத்தின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டுள்ளார். அதன் பின்னர் 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி பிறந்ததாகக் குறிப்பிட்டு இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளார். போலித் தகவல்களை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு சமர்ப்பித்துப் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டு முறையற்ற விதத்தில் பெறப்பட்ட கடவுச்சீட்டாகவே கருதப்படும்.
பிரஜை ஒருவர் தான் உண்மையான தகவல்களைக் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு வழங்குவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி பிறந்த இந்த பிரதிவாதி, அதற்கு நான்கு வருடங்களுக்குப் பின்னர் பிறந்ததாகக் குறிப்பிட்டு குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டு முறையற்ற விதத்தில் பெறப்பட்ட கடவுச்சீட்டாகக் கருதப்படலாம். அவ்வாறான கடவுச்சீட்டைத் தன்வசம் வைத்திருப்பதற்கு எவருக்கும் எவ்வித சட்டபூர்வ உரிமையும் கிடையாது.
பிரதிவாதி இந்த கடவுச்சீட்டைப் பயன்படுத்திப் பல சந்தர்ப்பங்களில் வெளிநாடு சென்றுள்ளார். அதன் மூலம் குறித்த முறையற்ற விதத்தில் பெறப்பட்ட கடவுச்சீட்டு பிரதிவாதியின் வசம் இருந்தமை தெளிவாகின்றது. கடவுச்சீட்டின் எழுத்துக்களில் பிரச்சினை காணப்பட்டதாகப் பிரதிவாதி தனது தரப்பு வாதத்தில் குறிப்பிட்டிருந்தார். எனினும் அந்தத் தவற்றைத் திருத்திக்கொள்வதற்கு அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, நீதிவான் தனக்கெதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை மதிப்பிட்டு தன்னைக் குற்றவாளியாக அறிவித்ததாகப் பிரதிவாதி தனது மேன்முறையீட்டில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நீதிவான் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைச் முழுமையாக பரிசீலினை செய்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மேன்முறையீட்டு பிரதிவாதியைச் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளியாக இனங்கண்டு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் பிரதிவாதிக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்வதாகவும், அதற்கமைய பிரதிவாதி சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிட்டார். இந்த வழக்குத் தீர்ப்பைக் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறும் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





