மீளாய்வின் பின்னரே கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: அமைச்சர் லால்காந்த உறுதி
அமைச்சர் கே.டி.லால்காந்த பதிலளிக்கையில், இத்திட்டம் முன்னைய அரசுகளால் இனவாத நோக்கங்களுக்காவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆமோதித்ததுடன், இத்திட்டம் மீளாய்வு செய்தபின்னரே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.
கிவுல் ஓயாத்திட்டம் மீளாய்வு செய்தபின்னரே நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதோடு தமிழர் தரப்பு கரிசனைகளை எழுத்துமூலமாக சமர்ப்பிக்குமாறும் கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.
பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் 17-02-2026 அன்று கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, வடக்கு மாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரின் பங்கேற்புடன் கிவுல் ஓயா நீர்ப்பாசன குடியேற்றத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது ரவிகரன் எம்.பி. தெரிவித்ததாவது:
வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள கூழாங்குளம் வயல், வெடிவைத்தகல்லு வயல், வெடிவைத்தகல்லு கிராமம், ஈச்சங்குளம் வயல், கோவில் புளிங்குளம் வயல், காட்டுப்பூவரசங்குளம் வயல், காஞ்சூரமோட்டைக் கிராமம் உள்ளிட்ட தமிழர்களின் பூர்வீக பகுதிகள் 910ஏக்கர் நிலப்பு நீரில் மூழ்கப்போகின்றது என்பதை கிவுல் ஓயா திட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.
குறிப்பாக கடந்த 9.2.2026 அன்று குறித்த கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பில் மணலாறு பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இத்திட்டத்தால் பாதிக்கப்படவிருக்கின்ற தமிழ் மக்கள் அழைக்கப்படாதமை குறித்து சுட்டிக்காட்டியதுடன், இத்திட்டத்தால் பயன்பெறவிருக்கின்ற பெரும்பான்மையினத்தவர்கள் மாத்திரமே அக் கலந்துரையாடலில் அழைக்கப்பட்டிருந்தமையினையும் அமைச்சர் லால் கிந்தவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.
இத்திட்டத்தினால் ஏற்கனவே தமிழ் மக்களின் பூர்வீக பகுதியான மணலாற்றை அபகரித்து அங்கு குடியேற்றப்பட்டுள்ள 4,372பெரும்பான்மையினக் குடும்பங்களும், குடியேற்றப்படவுள்ள 1628 பெரும்பான்மையினக் குடும்பங்களுமாக மொத்தம் 6000வரையிலான பெரும்பான்மையினக்குடும்பங்களே இத்திட்டத்தினால் பயன்பெறவிருப்பதாக திட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினேன்.
குறிப்பாக இத்திட்டத்திற்கென காடுகள் அழிக்கப்படுவதால் மழைவீழ்ச்சி உள்ளிட்ட விடயங்களில் தாக்கமேற்படும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டது. வனவிலங்குகள் மற்றும் பறவையினங்கள் என்பன அழிவடையும் ஆபத்துத்துக்களும் ஏற்படும் என்ற விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டன.
மேலும் தமிழ் மக்களின் காணிகளைப் பறித்து பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்குகின்ற ஒரு கட்டமைப்பாகவே மகாவலி அதிகாரசபை தமிழ் மக்கள் நோக்குகின்றார்கள் என்பதையும் இதன்போது எடுத்துரைத்தேன்.
அந்தவகையில் கடந்த கால ஆட்சியாளர்களின் காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை பறித்து மகாவலி அதிகாரசபை 30பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஒருவருக்குத் தலா 25ஏக்கர்வீதம் பகிர்ந்து கொடுத்ததை இதன்போது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன். இந்த 30பயனாளிகளில் முன்னாள் அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வாவின் தங்கையும் அடங்கியுள்ளார் என்பதையும் இதன்போது வெளிப்படுத்தியிருந்தேன் என்றார்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்ததாவது, 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் அங்கு குடியேற்றப்பட்ட வரலாறும் அதனால் அந்தநிலத்திற்கு சொந்தமான தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் தொடர்சியாக இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் கடந்தகால பேரினவாத அரசாங்கங்களின் செயற்பாடு தொடர்பிலும் விரிவான தெளிவூட்டல் செய்யப்பட்டது.
கடந்தகால அரசுகள் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டிற்காக உருவாக்கிய அதே திட்ட வரைபினை இந்த அரசாங்கமும் எதுவித கலந்துரையாடலோ மீளாய்வோ இன்றி நடைமுறைப்படுத்த முயல்வது ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவிதமான நீர்த் தேவையுடன் மகாவலி எல் வலய பிரதேசத்திற்கு வெளியே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மிக அதிக எண்ணிக்கையான விவசாயிகள் உள்ளார்கள். அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திட்டமொன்றினைப்பற்றிய சிந்தனை ஆட்சியாளர்களுக்கு ஏன் வரவில்லை எனவும் கேள்வியெழுப்பினார்.
2002ஆம் ஆண்டில் அரச அதிபராக இருந்த திரு.கணேஸ் அவர்களின் காலப்பகுதியில் வவுனியா வடக்கில் பெரிய மருதோடைக்குளம், சிற்றாற்றுக்குளம், கல்லாற்றுக்குளம் ஆகிய மூன்று குளங்களையும் பிரதானமாகக்கொண்ட 13 சிறிய நீர்ப்பாசனக்குளங்களை உள்ளடக்கிய படிமுறை நீர்ப்பாசன தொகுதியொன்றை புனரமைப்பதனூடாக 2000 ஏக்கர் வயல் நிலத்தில் செய்கை மேற்கொள்ள நியாப் மற்றும் சிரான் ஆகிய நிறுவனங்களுக்கு முன்மொழிவு சமர்ப்பித்தார்,
ஆனால் இன்றுவரை அத்திட்டம் கைகூடவில்லை. மக்களின் நீர்த்தேவையை பூர்த்திசெய்வதுதான் அரசாங்கத்தின் நோக்கம் என்றால் இந்த திட்டம் உட்பட பல இவ்வாறான திட்டங்களை அடையாளப்படுத்தி மக்கள் பயன்பெறும் வகையில் செயற்படுத்த உங்களுடன் சேர்ந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம், ஆனால் எமது ஒத்துழைப்பை பெறும் மனநிலை இதுவரை அரசாங்கத்திற்கு வராதது துரதிஸ்ரவசமானது என குறிப்பிட்டார்.
இந்நிலையில் அமைச்சர் கே.டி.லால்காந்த பதிலளிக்கையில், இத்திட்டம் முன்னைய அரசுகளால் இனவாத நோக்கங்களுக்காவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆமோதித்ததுடன், இத்திட்டம் மீளாய்வு செய்தபின்னரே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார். அத்துடன் இத்திட்டம் தொடர்பான தமிழ் தரப்பினது கரிசனைகள், முன்மொழிவுகளை தனக்கு எழுத்துமூலமாக சமர்ப்பிக்கும்படி கோரினார்
மேலும், கிவுல் ஓயா திட்டம் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள குளங்கள், வயல் நிலங்கள், அரச திணைக்களங்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட ஏனைய விவசாய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டமைன்றை பஏற்பாடு செய்யுமாறு அமைச்சரிடம் இக்கூட்டத்தில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரினர்.





