உயர்மட்ட அறிவியல், புத்தாக்க அமைப்பை உருவாக்குங்கள்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி முகமையில் தான் கற்றவை, கேட்டவை மற்றும் நேரில் அவதானித்தவை அனைத்தும் ஒரு ஒருங்கிணைந்த, இலக்கு சார்ந்த நிறுவனத்தின் அவசியத்தை உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி முகமையுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் நேரடி அனுபவங்களைத் தொடர்ந்து, இலங்கையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான ஒரு ஒற்றை உயர்மட்ட அமைப்பை நிறுவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது சிங்கப்பூர் விஜயத்தின் போது, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி முகமையின் சர்வதேச பங்களிப்புகளுக்கான தலைமை அதிகாரி கிறிஸ் லெக் மற்றும் சிரேஷ்ட உதவி இயக்குநர் எல்வின் சியா ஆகியோரை சந்தித்தார். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி முகமையில் தான் கற்றவை, கேட்டவை மற்றும் நேரில் அவதானித்தவை அனைத்தும் ஒரு ஒருங்கிணைந்த, இலக்கு சார்ந்த நிறுவனத்தின் அவசியத்தை உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, 'இலங்கை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க முகமை' என்ற அமைப்பை உருவாக்க அவர் முன்மொழிந்தார். தற்போது இலங்கையில் உள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்கள் சிதறிக்கிடப்பதோடு, போதிய நிதியுதவியின்றியும், ஒருங்கிணைந்த தேசிய மூலோபாயம் அற்ற நிலையிலும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த முகமைக்கான முக்கிய கவனப்பகுதிகளாக விவசாய-உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உணவு பாதுகாப்பு, காலநிலை மீள்தன்மை, அரிசி, தேயிலை மற்றும் தென்னை ஆராய்ச்சி, அறுவடைக்கு பிந்திய மற்றும் குளிரூட்டி விநியோகத் தொடர் தொழில்நுட்பம், வெப்பமண்டல ஆரோக்கியம் மற்றும் உயிரிய மருத்துவவியல், சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்கான மேம்பட்ட உற்பத்தி முறைகள், மின்னணுவியல் மற்றும் துல்லியமான கருவிகள், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு மற்றும் அரச தொழில்நுட்பம், ஸ்மார்ட் தளவாடங்கள் மற்றும் பேரிடர் முன்னறிவிப்பு ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.
மேலும், இந்தியாவின் சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் தென்கொரியாவின் கே.ஐ.எஸ்.ரி போன்ற ஒத்த நிறுவனங்களை சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய மாதிரிகளிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகம் உள்ளன என்றும் குறிப்பிட்டார். சிங்கப்பூர் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்தை அரசாங்கத்தாலும், மேலும் ஒரு சதவீதத்தை தனியார் துறையாலும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்காக முதலீடு செய்வதை அவர் சுட்டிக்காட்டினார். தெளிவான தேசிய தொலைநோக்கு பார்வையும் பலமான நிறுவனங்களும் எவ்வாறு உயர் பொருளாதார வளர்ச்சியை உந்தித்தள்ளும் என்பதற்கு இது ஒரு சான்று என்றும், இலங்கை இந்த பாதையை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





