பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப்பாதிப்புக்கள் 4.1 பில்லியன் டொலராகப் பதிவு: உலக வங்கி
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான உலக வங்கியின் பூர்வாங்க மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம், இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புக்களின் பெறுமதி 4.1 பில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டிருப்பதுடன், கண்டி, புத்தளம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை இப்பேரனர்த்தத்தின் விளைவாக விவசாயத்துறை வெகுவாக பாதிப்படைந்தமையினால் வறுமை மற்றும் உணவுப்பாதுகாப்பின்மை என்பன மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ள உலக வங்கி, மறைமுகப் பாதிப்புக்களின் பெறுமதி மற்றும் மீளக்கட்டியெழுப்பல் செலவினங்கள் என்பன கணிப்பிடப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட மொத்தப் பாதிப்பின் அளவு மேலும் உயர்வடையக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் உலகநாடுகளைச் சேர்ந்த அனர்த்த முகாமைத்துவ தொழில்நுட்ப நிபுணர்கள் ஊடாக இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் உலக வங்கி மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டுவருகின்றது. அம்மதிப்பீட்டின் ஊடாகக் கண்டறியப்பட்ட ஆரம்பகட்டத் தகவல்களை உள்ளடக்கிய பூர்வாங்க அறிக்கை தினம் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையின் பிரகாரம் இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புக்களின் பெறுமதி 4.1 பில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டிருப்பதுடன், இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4 சதவீதமாகும்.
அதேபோன்று அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு என்பவற்றில் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டி, புத்தளம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அம்மாவட்டங்களில் ஏற்பட்ட சேதத்தின் பெறமதி முறையே 689 மில்லியன் டொலர், 486 மில்லியன் டொலர் மற்றும் 379 மில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை குறிப்பாக அதிக எண்ணிக்கையான மண்சரிவுகள் பதிவான மத்திய மலைநாட்டுப்பகுதிகளில் வீதிகள், தண்டவாளங்கள், மீன்விநியோக உட்கட்டமைப்பு வசதிகள் என்பன வெகுவாக சேதமடைந்துள்ளன.
அதுமாத்திரமன்றி இப்பேரனர்த்தத்தின் விளைவாக விவசாயத்துறை வெகுவாகப் பாதிப்படைந்தமையினால் வறுமை மற்றும் உணவுப்பாதுகாப்பின்மை என்பன மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக வங்கியின் பூர்வாங்க அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மறைமுகமான பாதிப்புக்களின் பெறுமதி மற்றும் சேதமடைந்த வீடுகள், வீதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை மீளக்கட்டியெழுப்புவதற்கான செலவினங்கள் என்பன கணிப்பிடப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட மொத்தப் பாதிப்பின் அளவு மேலும் உயர்வடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்ததாக 4.1 பில்லியன் டொலராகக் கணிப்பிடப்பட்டிருக்கும் பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புக்களில் வீதிகள், பாலங்கள், தண்டவாளங்கள், மின்விநியோகக் கட்டமைப்புக்கள், தொலைத்தொடர்புக் கட்டமைப்புக்கள், நீர் விநியோகக் கட்டமைப்புக்கள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 1.735 பில்லியன் டொலராகும். அதிக எண்ணிக்கையான வீடுகள் சேதமடைந்த பகுதிகளான பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 985 மில்லியன் டொலராகும். அதேபோன்று நெற்பயிர்ச்செய்கை நிலங்கள், ஏனைய பயிர்ச்செய்கை நிலங்கள், விவசாய நடவடிக்கைகளுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள், உள்ளுர் மீன்பிடி நடவடிக்கைகளின் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பின் பெறுமதி 814 மில்லியன் டொலராகும். அதேவேளை பாடசாலைகள், சுகாதார வசதிகள், வணிகங்கள், கைத்தொழிற்சாலைகள் என்பன உள்ளிட்ட வீடுகள் அல்லாத கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 562 மில்லியன் டொலராகும்.
இது இவ்வாறிருக்க பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான முழுமையான விபரங்களை அடக்கிய உலக வங்கியின் இறுதி அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதியளவில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





