இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கலை ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள், குறிப்பாக தமிழர்கள் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை அளித்த வாக்குறுதி பல வருடங்களாகியும் நிறைவேற்றப்படாத நிலையில், இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் தொடரும் பயங்கரவாதத்தடைச்சட்டப் பிரயோகம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகரான கணேஷ்குமார் சங்கீத்சன் (24) பாடிய பாடலொன்று தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் மற்றும் புகழும் வகையில் அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டு, அண்மையில் அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார். அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகத் தொடர்ந்து வாக்குறுதியளித்த போதிலும், அது இன்னமும் நடைமுறையில் இருப்பதைக் காண்பிக்கும் சமீபத்திய மீறல் சம்பவம் இதுவாகும்.
மிகமோசமான இந்தப் பயங்கரவாதத்தடைச்சட்டம் முதன்முறையாக 1979 ஆம் ஆண்டு ஒரு தற்காலிக சட்ட ஏற்பாடாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது தற்போதுவரை தொடர்ந்து நடைமுறையில் இருப்பதுடன், பெரும்பாலும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களையும் இலக்குவைத்துப் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டம் குற்றச்சாட்டுக்களோ அல்லது நீதிமன்ற மேற்பார்வையோ இன்றி, சந்தேகநபராகக் கருதப்படுபவரை நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைப்பதற்கான பரந்துபட்ட அதிகாரத்தை வழங்குகிறது. அத்தோடு வலுகட்டாயமாகவோ அல்லது அச்சுறுத்தியோ பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்குவதற்கும் இச்சட்டம் வாய்ப்பேற்படுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி கடந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் 49 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், சமூகவலைத்தளங்களில் செய்த பதிவுகளுக்காகக் கைதுசெய்யப்பட்டவர்களும் அவர்களில் உள்ளடங்குகின்றனர். ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள், குறிப்பாக தமிழர்கள் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர்.
2017 ஆம் ஆண்டு மனித உரிமைகள் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்டது. அதனையடுத்து அப்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதியளித்தது. ஆனால் சுமார் ஒரு தசாப்தகாலம் கடந்துள்ள நிலையில், அவ்வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் பல தடவைகள் வலியுறுத்திய போதிலும், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்துவருகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகத் தற்போதைய அரசாங்கமும் வாக்குறுதி அளித்தது. ஆனால் அச்சட்டத்தின் பிரயோகம் இப்போது அதிகரித்திருப்பதுடன், அதனைப் பதிலீடு செய்வதற்கான சட்ட வரைவுகளைத் தயார்செய்யும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்துக்குத் தடை விதிக்கவேண்டும். அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை அளித்த வாக்குறுதி பல வருடங்களாகியும் நிறைவேற்றப்படாத நிலையில், இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்யவேண்டும். குறிப்பாக இவ்வாண்டின் பின்னரைப் பகுதியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கோரிக்கையைப் புதுப்பிப்பதற்காக விண்ணபிப்பதற்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், இது அவசியமாகிறது என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





