தென் மாகாண முன்னாள் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கைது
தென் மாகாண சபை உறுப்பினர்களின் 16.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாகாணத்திலுள்ள தன்னார்வ தொண்டர் சங்கங்களுக்கு நாற்காலிகளை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் தியனகேவின் பிரத்தியேக செயலாளரான வாச்சி ஹென்னதிகே தயாபால, நாற்காலிகள் கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச நிதிக்கு நட்டம் விளைவித்தமை மற்றும் கொள்முதல் விதிமுறைகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 15-06-2026 அன்று இவர் கைது செய்யப்பட்டார்.
தென் மாகாண சபையின் கீழ் இயங்கும் தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் 2019ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டவொன்றில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலேயே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
தென் மாகாண சபை உறுப்பினர்களின் 16.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாகாணத்திலுள்ள தன்னார்வ தொண்டர் சங்கங்களுக்கு நாற்காலிகளை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்போது, முறையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாது, குறிப்பிட்ட ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாகச் செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட 16,361 நாற்காலிகளை தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 54 மாகாண சபை உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு சென்று ஒப்படைத்ததன் ஊடாக, அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.





