பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுங்கள் - ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம்
மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்குமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது.
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்கும், மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்குமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் கடந்த ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்கும். மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்குமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது.
அதேவேளை இவ்விஜயத்தின்போது நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் பயணம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர், சகல சமூகங்களையும் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியதுடன், அண்மையகாலங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழியையும் பார்வையிட்டார்.
அத்தோடு பொருளாதார நெருக்கடி, கடன் மறுசீரமைப்பு மற்றும் இந்நெருக்கடியைக் கையாள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பவற்றின் விளைவாக மனித உரிமைகள் மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்களையும் உயர்ஸ்தானிகர் அடிக்கோடிட்டுக் காண்பித்தார்.





