பசில் ராஜபக்ஷவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு ஐடிக்கு கோட்டை நீதிவான் உத்தரவு
ரூமி ஜவ்பர் என்பவரை தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கும், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களை தடை செய்வதுக்கும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற நிதி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதிவான் பசன் அமரசேன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு 17-06-2026அன்று உத்தரவிட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபா நிதியை, அதன் ஊக்குவிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தாது, ஊவா மாகாண சபை தேர்தலுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட 12 ஆயிரம் டி-சேர்ட்டுகளைப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவினரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளரான ரூமி ஜவ்பர் என்பவரை தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கும், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களை தடை செய்வதுக்கும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மூன்றாவது சந்தேகநபர் குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 127ஆம் பிரிவின் கீழ் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக, அவர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.





