கைதாவதை தடுக்கக் கோரி கோட்டாபய வழக்கு
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகக் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு பயண தடை உத்தரவை மையப்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுத்து உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கூறி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் சட்டத்தரணி சனத் விஜயவர்தன இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். குறித்த எழுத்தாணை மனுவின் பிரதிவாதிகளாகப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மாதவ குணவர்த்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகக் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு பயணத்தடை உத்தரவை மையப்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாகக் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைகளின் பிரகாரம், ஐந்து சாட்சியாளர்களின் சாட்சியங்களை மையப்படுத்தி தன்னைக் கைது செய்வதற்கான முயற்சிகள் இருப்பதாகக் கோட்டாபய ராஜபக்ஷ இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த சாட்சியாளர்களில் ஹன்சீர் அசாத் மௌலானாவைத் தான் அறிந்திருந்த போதும் அவரை ஒருபோதும் சந்திக்கவில்லை எனவும், ஏனைய சாட்சியாளர்கள் யார் என்பது தமக்கு தெரியாது எனவும், இந்த விசாரணைகளில் சாட்சியாளர்கள் மீது செல்வாக்குச் செலுத்தத் தனக்கு எவ்விதமான சந்தர்ப்பமும் இல்லை எனவும் கோட்டாபய ராஜபக்ஷ இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, தான் ஜனாதிபதியானதும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து இடமாற்றப்பட்டமைக்குத் தானே காரணம் என எண்ணுவதாகவும், அதனால் அவருக்குத் தன்மீது முன்கோபம் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஷானி அபேசேகர இந்த விசாரணைகளைப் பக்கச்சார்பாக முன்னெடுப்பதாகவும் அவர் இதில் குற்றம் சுமத்தியுள்ளார். இதனைவிட, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாகத் தனக்குத் தெரிந்தவற்றை வாக்குமூலமாக வழங்குவதற்குத் தான் தயார் எனவும், தன்மீதான வெளிநாட்டு பயண தடையை நீக்க வேண்டும் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றமிடம் கோரியுள்ளார்.
தான் ஒருபோதும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் எண்ணம் இல்லை எனவும், அவ்வாறு வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படின் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முறையாக அறிவித்து, சட்டமா அதிபருக்கும் அது தொடர்பில் தெரிவித்து, அதன் பின்னர் உரிய ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் அந்தப் பயணத்தை முன்னெடுக்கத் தயார் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கக்கூடிய இந்த எழுத்தாணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ இந்த மனுவூடாகக் கோரியுள்ளார்.





