வட,கிழக்கு சிவில் மனித உரிமை அமைப்புகள் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு கடிதம்
குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசால் இன்றுவரை சுவீகரிக்கப்படும் மக்களின் காணிகளை பார்வையிட வேண்டும்.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் ட்ரக் செம்மணிப்புதைகுழி அகழ்வுப்பணிகள் நடைபெறும் பகுதிக்கும், முள்ளிவாய்க்காலுக்கும் நேரில் விஜயம் செய்வதோடு பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்க வேண்டும் என்று வட,கிழக்கு சிவில் அமைப்புக்கள் கூட்டாக அனுப்பியுள்ள கடித்தில் கோரியுள்ளன.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டிரக் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்களைச் சுட்டிக் காட்டி வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்புகளால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக வரலாற்றுக் காலந்தொட்டே இடம்பெற்றுவரும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியாமல் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இன்றுவரை தோற்றுப்போயே இருக்கின்றன.
மாறாக இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிறைவுற்று 16 வருட காலங்கள் கடந்த நிலையிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள மக்கள் ஓர் நிழல் யுத்தத்தினை எதிர்கொள்ளத்தக்கவகையிலேயே வாழ இந்த அரசுகளால் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் இலங்கை அரச பொறிமுறையும் பாதுகாப்புப் பொறிமுறையும் தமிழ் மக்களை அடக்கியொடுக்கிய வண்ணமே உள்ளன.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தாங்கள் இம்மாதத்தில் இலங்கைக்கு வருகை தரவிருப்பதாக அறிகின்றோம். எனவே தங்களின் இலங்கைக்கான விஜயத்தின் போதும் அதன் பின்னரும் கீழ் குறிப்பிடப்படும் விடயங்களை கவனத்திற்கொள்ளுமாறு தயவாக வேண்டி நிற்கின்றோம்.
1. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளை நீங்கள் பார்வையிட வேண்டும். குறிப்பாக செம்மணி மனித புதைகுழிக்குச் செல்ல வேண்டும்
2. இலங்கையின் வட, கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையையும் நீதியினையும் வழங்கக் கூடிய சர்வதேச பொறிமுறை ஊடான விசாரணையினை மேற்கொள்ள உதவுதல்.
3. இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும்.
4. வட, கிழக்கு பிரதேசங்களிலுள்ள சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து கள நிலவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
5. குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசால் இன்றுவரை சுவீகரிக்கப்படும் மக்களின் காணிகளை பார்வையிட வேண்டும்.
6. இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 21இற்கும் மேற்பட்ட மனித புதைகுழி அகழ்வின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு அழைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
7. இலங்கையில் உள்ள மனித புதை குழிகள் தொடர்பாகவும், இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாகவும் இலங்கை அரசை பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.
8. இலங்கை அரசாங்கமானது இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்றிட்டக் குழுவினரை இலங்கைக்குள் வருவதற்கான அழைப்பினை வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.
9. இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தினை சுதந்திரமான செயற்பாட்டிற்குள் செயற்படுவதற்கான பரிந்துரைகளை மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகளுக்கு மேற்கொள்ள வேண்டும்.
10. இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்திற்கு மீண்டும் 02 வருட காலக்கேடு வழங்க உறுப்புரிமை நாடுகளுக்கு பரிந்துரை செய்தல் வேண்டும்.
11. சீடோ சமவாயம் இலங்கையில் சட்டமாக்கப்படுவதற்கான பரிந்துரைகளை இலங்கை அரசிற்கு கட்டாயமாக வலியுறுத்த வேண்டும்.
12. பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய இரண்டையும் முற்றாக நீக்குவதற்கான பரிந்துரைகளை இலங்கை அரசிற்கு வலியுறுத்துதல் அவசியம்.
13. பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பாக கலப்புப் பொறிமுறை ஒன்றினை கட்டமைக்க இலங்கை அரசிற்கும் பேரவை நாடுகளுக்கும் பரிந்துரைத்தல்.
14. பொது மக்களுக்குச் சொந்தமான கையகப்படுத்தப்பட்ட காணிகளை உடனடியாக அரசு மீளக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
15. வழிபாட்டு உரிமை மற்றும் மத சுதந்திரத்தினை உறுதிப்படுத்த இலங்கை அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
16. இற்றைவரை படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட 40 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான நீதிக்கான விசாரணைகளை உடன் மேற்கொள்ள இலங்கை அரசிற்கு வலியுத்த வேண்டும்.
17. 76 வருட தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகளை அரசு உடன் மேற்கொள்ள வேண்டும் என்றுள்ளது.





