லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை - வெளிநாடு செல்ல தடைவிதித்தது நீதிமன்றம்
சந்தேகநபர் வெளிநாடு செல்லவும் பயணத்தடை விதித்து கடவுச்சீட்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு இதன்போது உத்தரவு பிறப்பித்திருந்தார்.
1 கோடியே 43 இலட்சம் ரூபா இழப்பை ஏற்படுத்தி ஊழல் எனும் குற்றத்தைப் புரிந்தமைக்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட, லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சேலாகே குணரத்னவை 19-06-2026 அன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.
அதற்கமைய சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிவான், சந்தேகநபர் வெளிநாடு செல்லவும் பயணத்தடை விதித்திருந்ததுடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு இதன்போது உத்தரவிட்டார். மேற்படி வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் மேற்படி உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்துக்கு உரிய கொள்முதல் நடவடிக்கைகளுக்கு புறம்பாக, மீள உப்புப் பொதியிடல் உறைகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1 கோடியே 43 இலட்சம் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் குறித்த விநியோகஸ்தர் நிறுவனத்துக்கு நன்மைப்பயக்கும் வகையில் செயற்பட்டு "ஊழல்" எனும் குற்றத்தை புரிந்துள்ளார் என்றனர்.
அதற்கமைய மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு சாட்சியங்களையும் கருத்தில் கொண்ட நீதிவான் சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும் சந்தேகநபர் வெளிநாடு செல்லவும் பயணத்தடை விதித்து கடவுச்சீட்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு இதன்போது உத்தரவு பிறப்பித்திருந்தார்.
லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சேலாகே குணரத்ன நேற்று (19) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இப்பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.





