சஜின் வாஸுக்கு எழுத்து பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
உள்நாட்டு இறைவரித்துறை ஆணையாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தினேஷ் பெரேரா, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 369 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான வருமான வரி தொகையை செலுத்தாமைக்கு காரணங்கள் ஏதும் இருப்பின் அதற்கான எழுத்து பூர்வ அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சஜின் வாஸ் குணவர்தன மீதான வருமான வரி செலுத்தாமை தொடர்பான வழக்கு விசாரணை 22-09-2025 அன்று கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஓசித மிகார மஹராச்சி தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.
2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 36,975,959 ரூபா தனிநபர் வருமான வரியை செலுத்தாத குற்றச்சாட்டின் பேரில் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் துறை ஆணையாளரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஜின் வாஸ் குணவர்தன நேற்று வழக்கு விசாரணைகளுக்காக மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது பிரதிவாதியான சஜின் வாஸ் குணவர்தன தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலக்க தனது கட்சிக்காரருக்கு எதிராக உள்நாட்டு இறைவரித்துறை ஆணையாளரால் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு எதிர்வரும் 26 ஆம் திகதி அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வழக்கு விசாரணையும் இடம்பெற உள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.
உள்நாட்டு இறைவரித்துறை ஆணையாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தினேஷ் பெரேரா, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஆகையால் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைத் தொடர்வதற்கு எந்தத் தடையும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இரு தரப்பு சாட்சியங்களையும் கருத்திற்கொண்ட கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஓசித மிகார மஹராச்சி, சஜின் வாஸ் குணவர்தன அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 369 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான வருமான வரி செலுத்தாமைக்கு காரணங்கள் ஏதும் இருப்பின் அவற்றுக்கான எழுத்து பூர்வ அறிக்கையை எதிர்வரும் 16-12-2025 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.





