நாட்டில் பேருந்துக் கட்டணம் 0.55% குறைப்பு
2025 ஜூன் 30 ஆம் திகதி மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, விலை சூத்திரத்திற்கு இணங்க, எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட மாற்றத்தை சரிசெய்த பின்னர் பேருந்துக் கட்டணத்தை 0.55% மட்டுமே குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2025 ஜூலை 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணத்தை 0.55% குறைக்கப் போக்குவரத்து அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வருடாந்திரக் கட்டணத் திருத்தத்தின் அடிப்படையில் இந்தப் பேருந்து கட்டண குறைப்பு செய்யப்படுகிறது. எவ்வாறாயினும், குறைந்தபட்ச கட்டணமான 27 ரூபாவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குறைந்த கட்டணங்களான 35 ரூபா மற்றும் 45 ரூபாவும் மாற்றமின்றி தொடரும் என்று தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு, 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தம் 2.5% ஆல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், 2025 ஜூன் 30 ஆம் திகதி மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, விலை சூத்திரத்திற்கு இணங்க, எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட மாற்றத்தை சரிசெய்த பின்னர் பேருந்துக் கட்டணத்தை 0.55% மட்டுமே குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரை சொகுசு, சொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்துச் சேவைகள் உட்பட அனைத்து இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கும் பேருந்துக் கட்டண குறைப்பு பொருந்தும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





