ரணிலுடன் சஜித் சந்திப்பு - உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றதாக சஜித் தெரிவிப்பு
அந்த சந்திப்பில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் தொடர்ச்சியாகவே சஜித் - ரணில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச சந்தித்துள்ளார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி, 5ஆம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சந்திப்பு, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்துள்ளது.
மிகவும் இரகசியமாகப் பேணப்பட்ட இந்தச் சந்திப்பு, நாட்டின் தற்போதைய அரசியல் போக்கு குறித்த முக்கியமான கட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை சஜித் பிரேமதாசவின் பிரதிநிதிகளான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் கபீர் ஹாசிம், பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் லக்கி ஜயவர்தன ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.
அந்த சந்திப்பில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் தொடர்ச்சியாகவே சஜித் - ரணில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு தரப்புகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவது அல்லது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது குறித்து இந்தச் சந்திப்பில் ஆழமாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வீரகேசரிக்கு தெரிவிக்கையில், 'நான் ரணில் விக்கிரமசிங்கவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்கே அவரைச் சந்தித்தேன்' என்று சுருக்கமாகக் குறிப்பிட்டார். மாறாக அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அவர் எதையும் கூறவில்லை. சஜித் - ரணில் சந்திப்பு, அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





