இலங்கை நடுநிலையான கொள்கையை பேணும் - அமைச்சர் விஜித்த
நெருக்கடியான காலப்பகுதிகளில் அமெரிக்கா தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்கும் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.
இலங்கை நடுநிலையானதும் சர்வதேச ரீதியில் இணக்கமானதுமான வெளிவிவகாரக் கொள்கைளைப் பேணுவதில் உறுதியாக இருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூரிடம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் போல் கபூருக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு 22-06-2026அன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது உலகளாவிய விவகாரங்களில் சமநிலையையும் அணிசேராக் கொள்கையையும் பேணி, சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக இலங்கை தொடர்ந்து செயற்படுவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் அமெரிக்க இராஜதந்திரியிடம் எடுத்துரைத்தார்.
அத்தோடு நெருக்கடியான காலப்பகுதிகளில் அமெரிக்கா தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்கும் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.
அதேபோன்று அண்மையகாலத்தில் மத்திய கிழக்கில் தீவிரமடைந்த மோதல்களின் விளைவாக உருவான ஸ்திரமற்றதன்மையின்போது உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்தை உரியவாறு பேணுவதற்கு அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித்த ஹேரத், வெளியகப் பொருளாதார அழுத்தங்களைக் கையாள்வதில் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவையும் நினைவுகூர்ந்தார்.
அதேவேளை பாதுகாப்புத்துறைசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினருக்கு கப்பல்களையும் விமானப்படையினருக்கு விமானங்களையும் வழங்கியமைக்காக அமெரிக்க இராஜதந்திரியிடம் நன்றியை வெளிப்படுத்திய அமைச்சர், இந்த உதவிகள் இல்ஙகையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் வான்வழி செயற்திறனைப் பெருமளவுக்கு மேம்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும் 'தற்போது நாட்டின் முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனவே அமெரிக்க முதலீட்டாளர்கள் முக்கிய துறைகளில் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து ஆராயமுடியும்' என்றும் அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.





