ஆட்பதிவு திணைக்களத்தின் பெயரில் வாட்ஸ்அப் ஊடாக நுணுக்கமான நிதி மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பலருக்கும் இந்தச் செய்தி அவர்கள் வர வேண்டிய திகதிக்கு சற்று முன்னர்தான் கிடைக்கிறது. இதனால், அடையாள அட்டை முடக்கப்பட்டுவிடும் என்ற பயத்தில், அவர்கள் உடனடியாக அதிலுள்ள போலித் தொலைபேசி எண்களுக்கு அழைக்கின்றனர்.
ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தி போன்ற வடிவில், வாட்ஸ்அப் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் மிக நுணுக்கமான நிதி மோசடி ஒன்று குறித்து உடனடியாக அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசரப் பிரிவு பொதுமக்களுக்கு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை கணினி அவசரப் பிரிவு நிறுவனம் மேலும் தெரிவித்ததாவது, இந்த மோசடியானது மிகவும் சட்டபூர்வமான மற்றும் உத்தியோகபூர்வமான வடிவில் செய்யப்படுவதால், எவரும் இதில் மிக இலகுவாக ஏமாந்து போகும் கடுமையான அபாயம் காணப்படுவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மோசடிக்காரர்கள் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் அனுப்பப்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட போலி வாட்ஸ்அப் செய்தி ஒன்றை இலக்கு வைக்கப்படும் நபர்களுக்கு அனுப்புகின்றனர். அந்தச் செய்தியில், ஆட்பதிவுச் சட்டத்தின் பிரகாரம் தேசிய அடையாள அட்டை விபரங்களைப் புதுப்பிப்பதற்கும், சரிபார்ப்பதற்கும் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும், இச்செய்தியைப் பெறுபவரின் முழுப் பெயர், அடையாள அட்டை இலக்கம் மற்றும் முகவரி ஆகியனவும் அதில் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால், எவருக்கும் இது குறித்து சந்தேகம் எழுவதில்லை. விபரங்களைப் புதுப்பிப்பதற்காக வருகை தர வேண்டிய திகதி, நேரம், இடம் அத்துடன் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் மற்றும் கைரேகை அடையாள விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியின் இறுதியில் மோசடிக்காரர்கள் ஒரு தீர்க்கமான எச்சரிக்கையையும் சேர்த்துள்ளனர். அதன்படி, இந்த சரிபார்ப்பில் கலந்துகொள்ளத் தவறினால் தேசிய அடையாள அட்டையுடன் தொடர்புடைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்றும், திகதியை மாற்றியமைக்கத் தேவையெனில் சந்திப்புக்கு குறைந்தது 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் தங்களது உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளனர். பலருக்கும் இந்தச் செய்தி அவர்கள் வர வேண்டிய திகதிக்கு சற்று முன்னர்தான் கிடைக்கிறது. இதனால், அடையாள அட்டை முடக்கப்பட்டுவிடும் என்ற பயத்தில், அவர்கள் உடனடியாக அதிலுள்ள போலித் தொலைபேசி எண்களுக்கு அழைக்கின்றனர். இதன்போது, விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதாகக் கூறி, மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு முறை கடவுச்சொல் (OTP) உள்ளிட்ட ரகசியக் குறியீடுகளைப் பெற்று, அவர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை மிக நுணுக்கமாகக் கொள்ளையடிக்கின்றனர்.
மேலும், ஆட்பதிவுத் திணைக்களம் ஒருபோதும் வாட்ஸ்அப் ஊடாக விபரங்களைச் சரிபார்க்கும் பணிகளை முன்னெடுப்பதில்லை என்பதை வலியுறுத்தியுள்ளது. எனவே, இவ்வாறான செய்திகளில் உள்ள போலி இணையத்தள இணைப்புகளை அழுத்துவதிலிருந்தும், வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு அழைப்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அத்துடன், உங்களது இரகசிய வங்கி விபரங்களையோ அல்லது ஒரு முறை கடவுச்சொல் குறியீடுகளையோ எந்தவொரு தரப்பினருக்கும் வழங்காது, பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





