சரித், ரகித்த, அருண கைது ஜூலை 03 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு - முன்னாள் அமைச்சர் விஜயதாஸ தொடர்பிலும் விசாரணை
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்த விசாரணையொன்றில் அடிப்படையில் இவர்கள் நேற்று காலை சிறப்பு குழுவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலக சந்தேகநபரான ஹரக்கட்டா எனும் நதுன் சிந்தக கொலை செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்க 5000 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரி அதில் முற்பணமாக 1200 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளரான சரித் அபேசிங்க, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சத்துரங்க ஆகியோர் 25-06-2025அன்று கைது செய்யப்பட்டனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்த விசாரணையொன்றில் அடிப்படையில் இவர்கள் நேற்று காலை சிறப்பு குழுவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த சம்பவங்களை மையப்படுத்தியே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் நேற்று மாலை கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 03 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். நேற்று இலஞ்ச ஊழல் விசாணைகள் ஆணைக்குழுவினர் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்செய்த போது ஆணைக்குழு சார்பில் உதவிப் பணிப்பாளர் இஷானி ராஜபக்ஷவுடன் பிரதிப் பணிப்பாளர் அனுஷா சம்பந்தபெரும, ஆஜராகி விடயங்களை முன்வைத்தார்.
முதல் சந்தேகநபரான சரித் அபேசிங்க சார்பில் முன்னிலையான கமல், இரண்;டாம் சந்தேகநபரான ரகித ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான நெவில் அபேரத்ன, நளிந்த இந்திரதிஸ்ஸ ஆகியோரோடு ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆஜரானார்.மூன்றாம் சந்தேக நபருக்காக சட்டத்தரணி கீத் கருணாரத்ன முன்னிலையானார்.





