அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தல் தொடர்பில் கனேடிய வர்த்தக சம்மேளனம் ஆராய்வு
பெண்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்கள் எவ்வாறு சமூக மாற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் என்பவற்றுக்கு உந்துதல் அளிக்கின்றன என்பது பற்றி விளக்கமளித்தார்.
கனேடிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'அபிவிருத்தியில் பெண்கள் - பொருளாதார ரீதியிலான வலுவூட்டல் மற்றும் சிறிய, நடுத்தரளவிலான நிறுவனங்களின் நிலைபேறான தன்மை' எனும் தலைப்பிலான கலந்துரையாடல் கடந்த வாரம் கொழும்பில் உள்ள கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்திய - பசுபிக் பிராந்தியத்தில் பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு இலங்கை, இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் துறை தலைவர்கள், அபிவிருத்திப் பங்காளிகள், தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைக்கும் வகையிலேயே இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
இக்கலந்துரையாடலில் சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்றிருந்த இந்தியாவின் சர்வதேச தொழில்முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகர் கலாநிதி ஹினா ஷா, பெண் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டல் தொடர்பில் இதுவரை காலமும் தான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந்தியாவில் நெகிழ்வுத்தன்மையுடனான சிறிய மற்றும் நடுத்தரளவிலான சுற்றுச்சூழல் அமைப்புக்களை உருவாக்கிய அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொண்ட அவர், பெண்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்கள் எவ்வாறு சமூக மாற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் என்பவற்றுக்கு உந்துதல் அளிக்கின்றன என்பது பற்றி விளக்கமளித்தார்.
அதேவேளை சந்தை அணுகலை வலுப்படுத்தல், சுற்றுச்சூழல்சார் வணிகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தல், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தல் மற்றும் பெண் தலைமைத்துவத்தின்கீழ் நிறுவப்படும் சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சியாண்மைகளின் நிலைத்திருப்புக்கு ஆதரவளித்தல் என்பவற்றை அடைந்துகொள்வதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.





