இலங்கை மக்களுக்காக முன்னிற்கும் எமது அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது: இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
மீட்பு பணிகள், நிவாரண உதவிகள் மாத்திரமின்றி மின்சார இணைப்புக்களை மீள வழங்குதல், பாலங்கள் மற்றும் வீதிகளைப் புனரமைத்தல் என்பவற்றையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
தித்வா புயல் ஏற்படுத்த இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களைப் போலவே மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பவும் புனரமைப்பு, மறுவாழ்வுக்கும் உதவுவோம். இலங்கை மக்களுக்காக முன்னிற்கும் எமது அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாகுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
கண்டிக்கு 12-12-2025அன்று விஜயம் செய்திருந்த உயர்ஸ்தானிகர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தித்வா புலயால் இலங்கை எதிர்கொண்டுள்ள பேரழிவிலிருந்து மீள்வதற்கு இந்தியா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்தோம். நாம் எவ்வாறு ஒரு கூட்டுறவு மனப்பான்மையுடன் இணைந்து செயல்படுவோம் என்பதையும் விளக்கினோம்.
இதுவரை நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களைப் போலவே மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பவும் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுக்கு உதவுவோம். இலங்கை இந்த பேரழிவை எதிர்கொண்ட முதல் நாளிலிருந்தே உதவி செய்ய முன்வந்த நாடு இந்தியாவாகும். அதிர்ஷ்டவசமாக இந்திய விமானந்தாங்கி கப்பல் அன்றை தினம் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்தது. அவற்றிலிருந்த உலங்கு வானூர்திகளை உடனடி நிவாரண சேவைகளில் ஈடுபடுத்தினோம். அதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து தொடர்ச்சியாக உதவிகள் வந்தன. நிவாரணப் பொருட்களை ஏற்றிய ஏழு கப்பல்களும், ஒன்பது விமானங்களும் இதுவரை இலங்கையை வந்தடைந்துள்ளன.
மீட்பு பணிகள், நிவாரண உதவிகள் மாத்திரமின்றி மின்சார இணைப்புக்களை மீள வழங்குதல், பாலங்கள் மற்றும் வீதிகளைப் புனரமைத்தல் என்பவற்றையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். மஹியங்கனையில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய மேலுமொரு விமானமும், கப்பலும் இந்தியாவிலிருந்து வரவுள்ளன.
மிகவும் அத்தியாவசியமான மற்றும் பற்றாக்குறையாக உள்ள சில மருந்துகள் டெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை ஓரிரு நாட்களில் நாட்டை வந்தடையும். அடுத்த கட்டமாக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து மறுவாழ்வு மற்றும் புனரமைப்புக்கான ஒரு திட்டத்தை திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு நாம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். இலங்கை மக்களின் தேவைகளுக்கு ஏற்பவே அனைத்தும் செய்யப்படும். அவர்களுக்கே எமது முன்னுரிமை. இலங்கை மக்களுக்காக முன்னிற்கும் எமது அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாகும் என்றார்.





