கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மழையுடனான காலநிலை குறைவடைந்தமையால் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக பதிவான மழை வீழ்ச்சியின் அளவு குறைவடைந்தமையால் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் தளர்த்தப்பட்டன. எவ்வாறிருப்பினும் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கண்டி - உடுதும்பர பிரதேசத்தில் 200 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனவே மீண்டும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கண்டியில் தொலுவ, உடுதும்பர, மினிப்பே மற்றும் மெததும்பர பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட, நில்தண்டாஹேன்ன, ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் பெய்த மழையின் காரணமாக குறித்த பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மண்சரிவிற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
பெரும்பாலான இடங்களில் வீடுகள் மற்றும் நிலங்களில் விரிசல்கள், பிளவுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான இடங்களில் நிச்சயம் மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படக் கூடும். பதுளை, கேகாலை, நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளன. அந்த மாவட்டங்களிலும் மீண்டும் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 5 மாவட்டங்களில் 32 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 மாவட்டங்களில் 18 செயலகப்பிரிவுகளுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி - உடுதும்பர பிரதேசம் குறித்து உரிய அவதானம் செலுத்தப்பட வேண்டும். கடந்த வாரங்களில் இந்த பிரதேசத்தில் பாரியளவிலான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. எனவே இது தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.
இதேவேளை கிழக்கில் அலை வடிவிலான தாக்கத்தின் காரணமாக, தீவின் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை நிலைமை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (40-50) கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.





