நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சுக்குப் பரிந்துரை
தேவையின்றி, பொருத்தமின்றி, முறையான காரணங்களின்றி கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின்மீது பிரயோகிக்கப்படும் மட்டுப்பாடுகள் மக்கள் மத்தியில் மிகையான அழுத்தத்தையும், அமைதியின்மையையும் தோற்றுவிக்கக்கூடும்.
2024 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நிகழ்நிலைக்காப்புச்சட்டமானது முற்றாக நீக்கப்பட்டு, முறையான சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்யப்படும் வரை, அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதாக அறிவிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சுக்கு பரிந்துரைத்துள்ளது.
அதேபோன்று அவதூறு என்பது குற்றவியல் குற்றம் அல்ல என நினைவுறுத்தியும், ஆகையினால் வெறுமனே அவதூறு பேச்சுடன் மாத்திரம் தொடர்புடைய முறைப்பாடுகளைப் பதிவுசெய்தல் மற்றும் விசாரணை செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரைத்துள்ளது.
கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் நிகழ்நிலைப் பாதுகாப்பு என்பன தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு:
சட்ட அமலாக்க அதிகாரிகளால் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு எதிராக அவதூறு பேச்சு என்ற குற்றச்சாட்டின்கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து மிகுந்த கரிசனையடைகின்றோம். ஊடகவியலாளரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் தொடர்பான உபகுழுவின் உறுப்பினருமான தரிந்து ஜயவர்தன, முறையான காரணங்கள் எவையும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென பொலிஸாரால் அழைக்கப்பட்டமை இதற்கான அண்மையகால உதாரணமாகும்.
அரசியலமைப்பின் 14(1)(ஏ) சரத்தின் ஊடாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது நாட்டின் சகல பிரஜைகளும் கருத்து கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கும், ஜனநாயகத்தில் பங்கெடுப்பதற்கும் அவசியமான மிகமுக்கிய அடிப்படை உரிமையாகும். அரசியலமைப்பினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள இவ்வுரிமையின் ஊடாக நிகழ்நிலை முறைமை (ஒன்லைன்) உள்ளடங்கலாக சகல தளங்களிலும் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன.
அவ்வாறிருக்கையில் தேவையின்றி, பொருத்தமின்றி, முறையான காரணங்களின்றி கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின்மீது பிரயோகிக்கப்படும் மட்டுப்பாடுகள் மக்கள் மத்தியில் மிகையான அழுத்தத்தையும், அமைதியின்மையையும் தோற்றுவிக்கக்கூடும்.
இவ்வாறானதொரு பின்னணியில் நிகழ்நிலைப்பாதுகாப்பு என்ற இலக்கை உரியவாறு பூர்த்திசெய்யாது, அதற்கு அப்பால் கருத்து வெளிப்பாட்டு சுதந்திர முடக்கத்துக்கு வழிகோலும் நிகழ்நிலை காப்பு சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும். அதேபோன்று இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படக்கூடிய எந்தவொரு புதிய சட்டமும் சகல தரப்பினரதும் பங்கேற்புடனேயே தயாரிக்கப்படவேண்டும். அதுவரை அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதாக நீதியமைச்சு அறிவிக்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





