12வயதுக்குட்பட்டோரின் சமூக வலைத்தள பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் கவனம்: அமைச்சர் சாவித்திரி
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைத்தொலைப்பேசி பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்
பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் சமூக வலைத்தளப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என்றும் இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
கொழும்பில் 29-01-2026அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைத்தொலைப்பேசி பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ள அரசாங்கம், அதற்கு இணையாக சமூக வலைத்தளப் பிரவேசத்தையும் தடை செய்யத் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் பல நாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கு சமூக வலைத்தள தடையை விதித்துள்ள நிலையில், இலங்கையிலும் அத்தகைய சட்டங்களை நடைமுறைப் படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இணைத்தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சிறுவர்கள் பல்வேறு ஒழுக்கக்கேடான சம்பவங்களுக்கு ஆளாவதும், அவர்கள் மீதான சைபர் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பதும் இத்தகையை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த காரணமாகும்.
அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை கையாள்வதற்காகப் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சவை அனுமதியும் கிடைத்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தரவுகளின்படி 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சிறுவர்கள் தொடர்பாக 10 455 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கமைய பாலியல் துன்புறுத்தல், பாலியல் துஷ்பிரயோகம், சைபர் வன்முறைகள், இளம் வயதில் கர்ப்பம், தற்கொலை முயற்சி போன்றவற்றில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கைவிட்டு பெற்றோர் வெளிநாடு சென்றமை தொடர்பாக ஒன்பது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுபாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்காலச் சந்ததியினரை பாதுகாக்கும் நோக்கில் சமூக வலைத்தள பயன்பாட்டில் இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியமானவை என்று வலியுறுத்தியுள்ளார்.





