2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரம்; இரண்டு அறிக்கைகள் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிப்பு
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் குழு கூடியது.
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்த இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்து குழுவின் இறுதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் குழு கூடியது.
அமெரிக்க டொலர் மில்லியன் 2.5 காணாமல் போனமை தொடர்பில் கடந்த மாதம் 08ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் ஆராய்ந்து பார்க்கப்பட்ட பின்னர், அவர்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை குறித்து குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்து குழுவின் இறுதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில் நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.





