பிணைமுறி வழக்கு மீண்டும் ஜூலை மாதம் 22ஆம் திகதி
மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கினை எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக, அதன் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இந்த வழக்கு 26-06-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கினை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ட்யல் அட்பார் நீதியரசர்கள் குழாம் முறையாக அமைக்கப்படவில்லை என்று நீதிபதி பகிரங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கமைய, மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கினை எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பேர்ஃபெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் மற்றும் அதன் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராகப் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





