ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம் - சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் கண்டனம்
குண்டர் ஒடுக்குமுறைப் படைக்கான வீரர்கள் குறித்த பரிசீலனைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு எதுவுமில்லை என்ற எம்மிடம் கூறப்பட்டது' எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும் படைகள் அனுப்பப்படும் தீர்மானம் அமையக்கூடாது. எனவே படையினரை அனுப்பிவைப்பதற்கு முன்னதாகவே நம்பகமான பரிசோதனை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.
ஹெய்ட்டியில் அமைதிப்பணிகளுக்காக இலங்கைப் படையினர் அனுப்பிவைக்கப்படுவது குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் அதன் உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், 'ஹெய்ட்டிக்கு இலங்கைப் படையினரை அனுப்புவது குறித்து எமது கரிசனைகளைத் தெரியப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளைச் சந்தித்தோம். இதற்கு முன்னதாக இலங்கைப் படையிரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் சுரண்டல்கள் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தெளிவுபடுத்தலும் செய்யப்படவில்லை. அதுமாத்திரமன்றி குண்டர் ஒடுக்குமுறைப் படைக்கான வீரர்கள் குறித்த பரிசீலனைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு எதுவுமில்லை என்ற எம்மிடம் கூறப்பட்டது' எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்று, 'இந்த வெற்றிடம், மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன மதிப்பீடு மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட கட்டமைப்புசார் பொறுப்புணர்வு என்பன உறுதிப்படுத்தப்படாமை தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது. ஒவ்வொரு கட்டமைப்புக்கும் ஒவ்வொரு ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை யாரும் பொறுப்பேற்று செயற்படாதபோது பொறுப்புக்கூறல் இல்லாமல் போய்விடுகிறது' என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் கவலை வெளியிட்டுள்ளது.
மேலும் 'மிகத் தாமதமாகக் கற்றுக்கொள்ளும் மற்றுமொரு பாடத்தைத் தாங்கும் நிலையில் ஹெய்ட்டி இல்லை. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும் படைகள் அனுப்பப்படும் தீர்மானம் அமையக்கூடாது. எனவே படையினரை அனுப்பிவைப்பதற்கு முன்னதாகவே நம்பகமான பரிசோதனை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும்' என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.





