காலநிலை பாதுகாப்பு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசிய முன்னுரிமை -எதிர்க்கட்சி தலைவர்
'தேசிய காலநிலை பின்னடைவு மற்றும் அனர்த்த தயார்நிலை' குறித்த விரிவான 'ஜனாதிபதி வெள்ளை அறிக்கை' ஒன்றை தயாரிப்பதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும்.
மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரங்கள் ஆபத்தில் இருக்கும்போது, அங்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனப் பிரிந்திருக்காமல் 'இலங்கை' என்ற ஒரே தரப்பாக நின்று நாம் செயற்பட வேண்டும். காலநிலை பாதுகாப்பு என்பது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டு தேசிய பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் 30-06-2026 அன்று நடைபெற்ற தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, காலநிலை சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கான மூலோபாய கொள்கை முன்மொழிவு ஒன்றையும் அவர் சமர்ப்பித்தார்.
அங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : உலகளாவிய விஞ்ஞான பூர்வ மதிப்பீடுகளின்படி, வரவிருக்கும் 2026-2027 எல் நினோ சுழற்சியானது கடந்த சில தசாப்தங்களில் இல்லாத அளவு மிகக் கடுமையானதாக மாறக்கூடும். இது நீண்டகால வறட்சியையும், அதைத் தொடர்ந்து கடுமையான வெள்ளத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தும் காலநிலை பாரிய பாதிப்பான நிலையை உருவாக்கும். இதற்கான தேசிய தயார்நிலையை வலுப்படுத்த இலங்கைக்கு மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது.
தித்வா சூறாவளி போன்ற அனர்த்தங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அனர்த்தங்கள் நிகழ்ந்த பின்னர் அவற்றுக்கு பதிலளிக்கும் பழைய நடைமுறையை இனிமேலும் நம்பியிருக்க முடியாது. அதற்குப் பதிலாக, விஞ்ஞான பூர்வமான முன்கணிப்புகள் மற்றும் முன்ஆயத்தங்கள் மூலம் தீர்மானங்களை எடுக்கும் அபாயங்களை முன்கூட்டியே எதிர்பார்க்கும் ஆளுமை நோக்கி நாடு நகர வேண்டும். அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் செய்யப்படும் முதலீடுகள், புனரமைப்புச் செலவுகளைக் கணிசமாகக் குறைப்பதோடு பல உயிர்களையும் காக்கும்.
காலநிலை பின்னடைவை பொருளாதார பின்னடைவிலிருந்து பிரிக்க முடியாது. எனவே, விவசாயம், நீர்வளம், வலுசக்தி, சுகாதாரம், நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்த ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்பாக இது அமைய வேண்டும்.
அதற்காக உணவு, நீர் மற்றும் வலுசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல், தாக்க அடிப்படையிலான முன்கணிப்பு முறைகளை நவீனமயமாக்குதல், வெப்ப அலைகள் மற்றும் பொதுச்சுகாதார அவசர நிலைகளுக்கான தயார்நிலையை மேம்படுத்தல், தேசிய காலநிலை இடர் மற்றும் அனர்த்த உளவு தகவல் மையத்தை நிறுவுதல் மற்றும் இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் காலநிலை முன்கணிப்பு மற்றும் விவசாய அவசரகால திட்டமிடல் மாதிரிகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைக்கின்றேன்.
இறுதியாக, இந்த உடனடி சவால்களுக்கு அப்பால் சென்று, எதிர்கால சந்ததியினருக்காக தெளிவான தேசிய வழிகாட்டுதலை நிறுவும் வகையில், 'தேசிய காலநிலை பின்னடைவு மற்றும் அனர்த்த தயார்நிலை' குறித்த விரிவான 'ஜனாதிபதி வெள்ளை அறிக்கை' ஒன்றை தயாரிப்பதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும்.
வெள்ளம், வறட்சி அல்லது வெப்ப அலைகள் அரசியல் சார்புகளின் அடிப்படையில் மாறுபடுவதில்லை என்பதால், நாட்டைப் பாதுகாக்கும் இந்த பொதுவான தேசியப் பொறுப்பிற்கு, பாராளுமன்றம், அரச நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் என அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார்.





