சலே சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு தீர்மானமெடுத்துள்ளார் - அமைச்சரவை பேச்சாளர்
அவரது ஊட்டச்சத்து மற்றும் உடல் நலனில் எந்தவொரு குறைபாடும் அல்லது பிரச்சினையும் ஏற்படவில்லை.
சுரேஸ் சலே புலனாய்வு அதிகாரி என்பதால் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளும் திறன் அவருக்கு இருக்கிறது. அதனடிப்படையிலேயே அவர் உணவை உட்கொள்ள தீர்மானித்துள்ளார். அவர் தரப்பிலிருந்து ஏதேனும் புகார்கள் முன்வைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஒரு நோயாளி என்ற ரீதியில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் தொடர்ச்சியாகவும் அவதானமாகவும் கண்காணித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 01-07-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சுரேஷ் சலே தற்போது உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, வாய் வழியாக உணவை உட்கொள்ள ஆரம்பித்துள்ளார். அவர் உண்ணாவிரதத்தில் இருந்த காலப்பகுதியிலும், அவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவுகள் மூக்கு வழியாகவும், நரம்பு வழியூடான மருத்துவ முறைகள் மூலமாகவும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.
இதனால் அவரது ஊட்டச்சத்து மற்றும் உடல் நலனில் எந்தவொரு குறைபாடும் அல்லது பிரச்சினையும் ஏற்படவில்லை. தற்போது அவர் வழமை போல வாய் வழியாக உணவை உட்கொள்ளத் தொடங்கியிருப்பது பெரும் வசதியாக அமைந்துள்ளது. அத்துடன், அவருக்கு ஏற்கனவே கண்டறியப்படாத சில நோய்கள் தற்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு, அதற்கான உரிய மருத்துவப் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவர் தரப்பிலிருந்து ஏதேனும் புகார்கள் முன்வைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஒரு நோயாளி என்ற ரீதியில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் தொடர்ச்சியாகவும் அவதானமாகவும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஒரு புலனாய்வு அதிகாரி என்பதால் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளும் திறன் அவருக்கு இருக்கிறது. அதனடிப்படையிலேயே அவர் உணவை உட்கொள்வது போன்ற முடிவுகளை எடுத்துள்ளார் என்றார்.





