அரச செவிலியர் சங்கத்தினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
மறுபுறம், புதிய செவிலியர்களை உருவாக்கும் செவிலியர் கல்லூரிகளில் 150 இற்கும் மேற்பட்ட செவிலியர் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.
இலங்கையின் செவிலியர் சேவையின் கல்வித்துறையில் நிலவும் கடுமையான நெருக்கடிகள் மற்றும் செவிலியர் பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கக் கோரி, அரச செவிலியர் சங்கத்தினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 01-07-2026 அன்று முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரச செவிலியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், செவிலியர் சேவையின் கல்வித்துறையில் தற்போது பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அரச செவிலியர் சங்கமாகிய நாம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடி இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளோம். தற்போதைய தரவுகளின்படி, இலங்கையின் செவிலியர் சேவையில் 65000 செவிலியர்கள் சேவையில் இருக்க வேண்டிய இடத்தில், 37000 செவிலியர்கள் மாத்திரமே பணியாற்றுகின்றனர்.
மறுபுறம், புதிய செவிலியர்களை உருவாக்கும் செவிலியர் கல்லூரிகளில் 150 இற்கும் மேற்பட்ட செவிலியர் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. இந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, புதிய ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சரிடமும் சுகாதார அதிகாரிகளிடமும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். எனினும், அவர்கள் இதனைச் செய்வதற்குத் தயாராக இல்லை. செவிலியர் ஆசிரியர்களைப் பற்றுக்கொள்வதற்கான பரீட்சைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு 3 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை அதற்கான பரீட்சையை நடத்தி புதியவர்களைச் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தத் தாமதம் காரணமாக, செவிலியர் கல்லூரிகளில் மாணவர்களுக்குக் கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பரீட்சைகளை நடத்துவதிலும் பெரும் சிரமங்கள் காணப்படுகின்றன. வரலாற்றில் முதலாவது தடவையாக, பரீட்சை விடைத்தாள்களைப் பார்ப்பப்பதற்காக செவிலியர் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் செவிலியர் கல்வியை முன்னெடுத்துச் செல்ல முடியாது. முறையான கல்வியறிவில்லாத செவிலியர்களை உருவாக்குவதுதான் சுகாதார அதிகாரிகளினதும் அரசாங்கத்தினதும் தேவையா என்ற கேள்வியை நாம் எழுப்புகின்றோம்.
இது குறித்து நாம் பல தடவைகள் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, புதியவர்களைச் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு கோரியிருந்தோம். எனினும், அதற்கான பரீட்சையை நடத்தாமல் காலத்தைக் கடத்தும் போக்கே தென்படுகின்றது. இதன் காரணமாக செவிலியர் கல்வித்துறை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. முறையான கல்வியும் தகைமையும் இல்லாத செவிலியர்கள் உருவாக்கப்படும் போது, அது நேரடியாகவே நோயாளர் பராமரிப்பைப் பாதிக்கும். அத்துடன் செவிலியர் சேவையின் தொழில்சார் அபிவிருத்திக்கும் இது பெரும் தடையாகும்.
65000 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 37000 பேர் மாத்திரமே பணிபுரிவதால், தற்போதைய செவிலியர்கள் கடுமையான பணிச்சுமைக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளனர். 6 மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டிய செவிலியர்கள், இன்று 12, 18 மற்றும் 24 மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தத் தீவிர மன அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், கின்னியா வைத்தியசாலையின் செவிலியர் அதிகாரி ஒருவர் 2 வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவ்வாறான மரணங்கள் மேலும் தொடரும் வரையா சுகாதார அமைச்சரும் அதிகாரிகளும் காத்துக்கொண்டிருக்கப் போகின்றார்கள்? எனவே, உடனடியாக இந்தத் செவிலியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். செவிலியர் கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை முழுமைப்படுத்தி, புதிய ஆசிரியர்களைச் சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த மனிதவளப் பிரச்சினையைத் தீர்க்காமல் நோயாளர் பராமரிப்பை மேம்படுத்த முடியாது என்பதை அரசாங்கத்துக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
தகைமையற்ற செவிலியர்களை உருவாக்கி, நாட்டு மக்களுக்குத் தரமற்ற சுகாதாரச் சேவை வழங்கி, பொதுமக்களை மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதே அதிகாரிகளின் நோக்கமா எனக் கேட்கின்றோம். எனவே, சுகாதார அமைச்சு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வை வழங்க வேண்டும். இந்த விடயம் தொடர்பாக நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில், ஆணைக்குழுவானது சுகாதார அதிகாரிகளுக்கு முறையான மற்றும் தெளிவான கட்டளைகளை பிறப்பிக்கும் என நாம் முழுமையாக நம்புகின்றோம் என்றார்.





