எம்.பி.களுக்கு ஓய்வூதிமில்லை 152மேலதிக வாக்குகளால் சட்டம் நிறைவேற்றம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட, புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஆகியோர் எதிராக வாக்களித்தனர்.
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருசில உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சுயேட்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆதரவாக வாக்களித்தனர்.
எதிர்க்கட்சியின் உறுப்பினர்களான சாமர சம்பத் மற்றும் சானக மாதுகொட ஆகியோர் மாத்திரம் எதிராக வாக்களித்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
பாராளுமன்றத்தில் 17-02-2026 அன்று பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமையை நீக்குவதற்கான பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக 2026.01.07 ஆம் திகதியன்று சபைக்கு சமர்ப்பித்தார்.
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ,பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தினை நீக்குவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசு பேரவையின் 1977ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தை அரசியலமைப்பின் 121 (1) உறுப்புரையின் பிரகாரம் பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினர். உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட 'பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)' சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் 2026.02.06 ஆம் திகதியன்று பாராளுமன்றத்துக்கு அறிவித்தார்.
இந்த சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதில்லையென்பதால் அதனைப் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) திருத்த சட்ட மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமூலம் மீதான விவாதத்தை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கோரியிருந்தார்.
இதையடுத்து இலத்திரனியல் முறையில் இடம்பெற்ற வாக்கெடுப்பிலேயே சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 02 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 152 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட, புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஆகியோர் எதிராக வாக்களித்தனர்.
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தும் திகதி முதல் 1971 ஆம் ஆண்டு முதல் இதுவரை காலமும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு இரத்துச் செய்யப்படும்.
இந்த சட்டமூலத்திற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன உடனடியாகவே தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.





