கப்ரால் மீது மேல் நீதிமன்றில் புதிய குற்றப்பத்திரிகை
இந்த புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசேட மூவரடங்கிய நீதிமன்றின் மூலம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிரேக்க பிணைமுறி கொடுக்கல் -வாங்கலின் போது விதிக்கப்பட்ட நீதிமன்ற நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்ட மனோஜ் தல்கொடபிட்டிய (தலைவர்), உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக ஸ்ரீ ராகல ஆகிய நீதிபதிகள் அடங்கிய நிரந்தர விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே, கிரேக்க நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்ததை அறிந்திருந்தும், அந்நாட்டு அரசாங்கத்தின் பிணைமுறிகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு 184 கோடி ரூபாவுக்கும் அதிக (1,843,267,595.60) நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் கப்ரால் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை கடந்த வருடம் டிசம்பர் 10 ஆம் திகதி பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம், ஏனைய பிரதிவாதிகளான முன்னாள் பிரதி ஆளுநர் தர்மசேன தீரசிங்க, உதவி ஆளுநர்களான தொன் வசந்த ஆனந்த சில்வா மற்றும் எம்.ஏ.கருணாரத்ன ஆகிய மூவரையும் நிபந்தனைகளின்றி விடுவித்தது.
எனினும், முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை மாத்திரம் நிபந்தனையுடன் விடுவித்த நீதிமன்றம், அந்த நிபந்தனையின்படி பிணைமுறி கொடுக்கல்-வாங்கலினால் ஏற்பட்ட 184 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தொகையை 3 மாதங்களுக்குள் மத்திய வங்கியில் வைப்பிலிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையிலும், அஜித் நிவாட் கப்ரால் அந்தத் தொகையைச் செலுத்தத் தவறி நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார்.
இதனையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க பிரதம நீதியரசரிடம் விடுத்த விசேட வேண்டுகோளுக்கமைய, இந்த புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசேட மூவரடங்கிய நீதிமன்றின் மூலம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அஜித் நிவாட் கப்ரால், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
அவரது கடவுச்சீட்டை நீதிமன்றப் பொறுப்பில் எடுத்த நீதிபதிகள் குழாம், கைவிரல் அடையாளங்களைப் பெற்று குற்றப் பின்னணி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்தது.





