பண பேராசையே அனர்த்ததுக்கு காரணம்: பேராயர் மெல்கம் ரஞ்சித்
வணிகப் பொருளாதாரத்தால் கிறிஸ்துமஸ் முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான மற்றொரு பண்டிகையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் பணத்தை வாங்கிக்கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்தமையே மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகுமென பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகையின் தேசிய நிகழ்வு 25-12-2025 அன்று உஸ்வட்டகெய்யாவ தேவாலயத்தில் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற ஆராதனையில் பேராயர் மெல்கம் ரஞ்சித் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசியல் வாதிகள் பணத்தை பெற்றுக் கொண்டு காடழிப்பு சதுப்பு நிலங்களை நிரப்புதல், மலைகளில் கட்டடங்கள் அமைப்பதற்கு அனுமதி அளித்தல் போன்ற பாரியளவில் சுற்றுச் சூழலை நாசப்படுத் துவதற்கு உதவி செய்தனர். அத்தோடு அவற்றுக்கு பக்கப்பலமாகவும் இருந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட பேரிடரில் இன்னும் மக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். ஏன் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்பதை ஆழமாகப் பார்க்கின்றபோது, சிலர் தனது சுயநலத்திற்காக சுற்றுச் சூழலை முழுமையாக நாசப்படுத்தியதாலாகும்.
எவ்வித ஒழுக்கமும் அற்ற நிலையில் குப்பை கூளங்களை வீதியில் வீசி, முழு நாட்டையும் அசுத்தமாக்கியது யார். நாங்களே இவற்றை செய்தோம். இதற்கு அரசியல்வாதிகளும் பக்க பலமாக இருந்து செயற்பட்டுள்ளனர்.
அது மட்டுமல்ல, பணத்தை சேமிக்க துடிக்கும் பேராசைகளால் இந்த நிலைமை ஏற்பட்டது. ஆனால் நாம் மரணிக்கும் போது இவற்றை கொண்டு செல்லப்போவதில்லை.
கிறிஸ்தவம் என்பது துறவைப் பற்றியது. துறவறம் இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை. இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் துறந்து வாழ்ந்தார். அதனால்தான் இதை நிரூபிக்க அவர் பிறந்தார். அவர் ஒரு தொழுவத்தைத் தேர்ந்தெடுத்தார்.
ஏழை பெற்றோரைத் தேர்ந்தெடுத்தார்.சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட மக்களிடையே பிறந்தார். இந்தச் செய்தி தெளிவாகக் காட்டப்பட வேண்டும். நம் வாழ்வில்இ நாம் பெரும்பாலும் உலகச் செல்வம்இ உலக அதிகாரம் மற்றும் உலக உடைமைகளின் கைதிகளாக வாழ்கிறோம். இது புத்தரின் போதனைகளிலும் கற்பிக்கப்படுகிறது. துன்பத்திற்கான காரணம் ஏக்கம். நமது சமூகம் சுத்திகரிக்கப்பட வேண்டுமானால், இந்த ஏக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.
வணிகப் பொருளாதாரத்தால் கிறிஸ்துமஸ் முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான மற்றொரு பண்டிகையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் ஒரு வணிகப் பண்டிகை அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
'கிறிஸ்துமஸில் முக்கியமானது கிறிஸ்துமஸ் மரம், தொழுவம் அல்லது சாண்டா கிளாஸ் அல்ல. இயேசு கிறிஸ்து நமக்குக் காட்டிய பாதை அவர் நமக்குச் சுட்டிக்காட்டிய பாதையைப் புரிந்துகொள்வது அந்தப் பாதையில் நடப்பதும்தான் உண்மையிலேயே முக்கியம் என்றார்.





