தமிழக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்கள் சந்திப்பு
தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்துவரும் ஈழத்தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கும், அவர்களது மனிதாபிமானத் தேவைகளுக்கும் உரியவாறான தீர்வை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது
தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது கோரிக்கைகளின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து கடந்த பெப்ரவரி மாதம் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதம் பற்றி அவரது புதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினிடம் நினைவூட்டிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளைத் தடுப்பதற்காக தமிழகத்திலுள்ள சகல அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு அவசியமான அழுத்தங்களை வழங்கவேண்டும் என வலியறுத்தியுள்ளனர்.
தமிழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வராஜா கஜேந்திரன், பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தர்மலிங்கம் சுரேஷ், சட்டத்தரணி சுகாஷ், சட்டத்தரணி நடராஜா காண்டீபன் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் 04-07-2026 அன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின்போது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (30) தமிழக முதலமைச்சர் ஜோசப் சி.விஜயுடனான சந்திப்பின்போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் மீண்டும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர், தமது கோரிக்கைகளின் அடிப்படையில் அவர் கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் எழுதிய கடிதம் குறித்து நினைவூட்டப்பட்டது.
அந்த கடிதத்தில் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடுகளைத் தொடர்ந்து வலியுறுத்துவதுடன், இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய மத்திய அரசுக்கு அவசியமான அழுத்தங்களை வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
அதேவேளை ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக தமிழர்களின் தேசம், தனித்துவமான மக்கள் என்ற அங்கீகாரமும் அவர்களின் சுயநிர்ணய உரிமையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில் கூட்டாட்சிக் கட்டமைப்பிலான அரசியல் தீர்வை ஏற்படுத்த இந்திய உறுதியான அரசியல் முன்முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அதேபோன்று தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச, சுயாதீன மற்றும் நம்பகமான விசாரணையை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக நீண்டகாலமாக நிலவிவரும் முரண்பாடுகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அதுமாத்திரமன்றி தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்துவரும் ஈழத்தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கும், அவர்களது மனிதாபிமானத் தேவைகளுக்கும் உரியவாறான தீர்வை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன், ஈழத்தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து தமிழகத்திலுள்ள சகல கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு பிரதிநிதித்துவக்குழுவை அமைத்த, அதனூடாக இவ்விவகாரங்களை மையப்படுத்திய சர்வகட்சி மாநாட்டை நடத்துவதற்குரிய முயற்சிகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.





