எதிர்க்கட்சி தலைவரால் டெங்கு ஒழிப்புக்கு ஆறு முக்கிய முன்மொழிவுகள் முன்வைப்பு
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் டெங்கு ஒழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான தொழில்நுட்ப வழிமுறையை இலங்கையிலும் பின்பற்ற வேண்டும்.
நாட்டில் டெங்கு காய்ச்சலின் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான 6 முக்கிய முன்மொழிவுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த யோசனைகளை வெளியிட்டுள்ளார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான டெங்கு நோயாளர்கள் நாளாந்தம் இனங்காணப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மேல் மாகாணத்தில் இந்நிலைமை மிக மோசமடைந்து, மருத்துவமனைகளின் கொள்ளளவையும் மிஞ்சியுள்ளது. இந்த அவசர நிலையைக் கையாள 6 முன்மொழிவுகளை முன்வைக்க விரும்புகின்றோம்.
அதற்கமைய பூச்சியியல் துறை உத்தியோகத்தர்களின் களப்பணிகளுக்கு அவசியமான மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
களப் பரிசோதனைகளை தடையின்றி மேற்கொள்ள, 2007ஆம் ஆண்டின் நுளம்பால் பரவும் நோய்த்தடுப்புச் சட்டத்தை 2026ஆம் ஆண்டுக்கு பொருத்தமானதாக திருத்த வேண்டும். அத்துடன், கொள்கை வகுப்பிலும் தீர்மானம் எடுப்பதிலும் இவர்களின் தரவுகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும்.
மேல்மட்டத்திலிருந்து வரும் அரசியல் தலையீடுகளைக் குறைத்து, தரவுகள் மற்றும் விஞ்ஞானபூர்வமான விடயங்களின் அடிப்படையில் அதிகாரிகள் சுயாதீனமாக பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
அநுராதபுரம், குருநாகல், மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே, பொறுப்பான சுகாதார அமைச்சர் உடனடியாக இந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இவர்களின் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் டெங்கு ஒழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான தொழில்நுட்ப வழிமுறையை இலங்கையிலும் பின்பற்ற வேண்டும். இதற்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அவுஸ்திரேலிய அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சி முழு ஒத்துழைப்பை வழங்கும்.
பூச்சியியல் துறையில் இருக்க வேண்டிய 346 உத்தியோகத்தர்களில் தற்போது 192 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே, நிலவும் ஊழியர் வெற்றிடங்களை அரசு விரைவாக நிரப்ப வேண்டும். மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அற்பக் காரணங்களை விடுத்து இந்த முன்மொழிவுகளை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.





