சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறது - சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன
அர்த்தமுள்ள விவாதங்களைத் தூண்டுவதோடு, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே அதிகளவிலான கல்வி, கலாசாரம் மற்றும் மக்களுக்கும் மக்களுக்குமிடையேயான பரிமாற்றங்களை ஊக்குவிக்கட்டும்.
இருதரப்புக்கும் பயனளிக்கக்கூடிய மற்றும் நமது இரு நாட்டு மக்களின் அபிவிருத்தி இலட்சியங்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறது என சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அரசியல் சிந்தனைகள், ஆட்சிமுறை, தேசிய முன்னேற்றக் கொள்கைகள் மற்றும் நவீனமயமாக்கல் தொடர்பான கருத்துகளை உள்ளடக்கிய இந்த நூலின் வெளியீட்டு விழா, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.
“இலங்கையும் சீனாவும் நவீனமயமாக்கல் பாதையில் கைகோர்த்து பயணிப்பதற்கான அனுபவப் பகிர்வு” (என்ற கருப்பொருளில் மாநாடும், கலந்துரையாடல் நிகழ்வும் இதனுடன் இணைந்து இடம்பெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன மேலும் தெரிவிக்கையில், இலங்கையும் சீனாவும் பல நூற்றாண்டுகால நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ளன. இது பண்டைய கடல்சார் பட்டுப்பாதை வழியே எமது மக்களிடையே நிலவிய வரலாற்றுப்பூர்வமான பரிமாற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகும்.
சமீபத்திய தசாப்தங்களில், பரஸ்பர நம்பிக்கை, இறையாண்மைக்கான மரியாதை மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நமது இருதரப்பு உறவுகள் தொடர்ந்து ஆழமடைந்து வருகின்றன.
பெரிய அளவிலான உள்கட்டமைப்பு, வர்த்தகம், கல்வி, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள் போன்ற துறைகளில் ஆதரவளிப்பதன் மூலம், இலங்கைக்கான ஒரு மதிப்புமிக்க அபிவிருத்திப் பங்காளியாக சீனா விளங்கி வருகிறது. இந்தக் கூட்டுறவுகள் இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளதோடு, நமது இரு நாட்டு மக்களிடையேயான பிணைப்பையும் வலுப்படுத்தியுள்ளன.
கருப்பொருளான 'ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட எதிர்காலம்: நவீனமயமாக்கலின் பாதையில் சீனாவும் இலங்கையும் ஒன்றிணைந்து முன்னேறுதல்' என்பது மிகவும் பொருத்தமானதும் அர்த்தமுள்ளதுமாகும்.
ஒவ்வொரு நாடும் தனது சொந்த தேசிய ஒருமித்த கருத்தின் படியே நவீனமயமாக்கலை நோக்கிய பயணத்தை மேற்கொள்கிறது. ஒவ்வொருவரினதும் பாதை வேறுபட்டதாக இருந்தாலும், இட்சியங்கள் பொதுவானவையாகவே உள்ளன.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், நிலையான பொருளாதார வளர்ச்சியை வளர்த்தெடுத்தல், கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தல், சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்தல், கண்டுபிடிப்புகள், டிஜிட்டல் மாற்றம், கல்வி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பிராந்திய இணைப்பு ஆகியவற்றின் மூலம் மூலோபாய, உள்ளடக்கிய மற்றும் நிலையான அபிவிருத்திக்கு இலங்கை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்.
சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட இலட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும் கூட்டுறவுகளை நாம் வரவேற்கிறோம். இலங்கை தனது உருமாற்ற அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை சில முக்கிய தேசிய முன்முயற்சிகளின் மூலம் முன்னெடுத்து வருகிறது.
அவற்றுள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதற்கான கிறீன் ஸ்ரீலங்கா திட்டம், போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான முன்முயற்சி, நவீன டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கை, வறுமையை ஒழித்து, உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் சமூகங்களை வலுவூட்டுவதையும், பாதிக்கப்படக்கூடிய மக்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பிரஜா சக்தி திட்டம் ஆகியன அடங்கும்.
மனிதகுலத்திற்கான ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கருத்தாக்கத்தின் மூலம், பங்காள நாடுகளுடன் அபிவிருத்தி வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், உலகளாவிய செழுமைக்குப் பங்களிக்கவும் சீனா முயன்றுள்ளது. 'பட்டுப்பாதை முன்முயற்சி' உயர்தர வளர்ச்சியின் புதிய கட்டத்திற்கு முன்னேறிச் செல்லும் வேளையில், நிலையான, இருதரப்புக்கும் பயனளிக்கக்கூடிய மற்றும் நமது இரு நாட்டு மக்களின் அபிவிருத்தி இலட்சியங்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
சபாநாயகர் என்ற முறையில், சர்வதேச நட்புறவை வளர்ப்பதிலும், எல்லைகடந்த நிர்வாகத்திற்கு ஆதரவளிப்பதிலும், ஒத்துழைப்புக்கான சாதகமான சூழலை உருவாக்குவதிலும் நாடாளுமன்றம் வகிக்கும் முக்கிய பங்கை நான் அங்கீகரிக்கிறேன்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பாராளுமன்ற ரீதியிலான தொடர்புகள், பரஸ்பர புரிதலைத் தொடர்ந்து வலுப்படுத்துவதோடு, எமது விரிவான இருதரப்பு உறவுகளுக்கும் சாதகமான பங்களிப்பை வழங்குகின்றன.
சீனா மற்றும் இலங்கையின் ஆட்சிமுறை குறித்து விவாதிக்க நாம் இங்கு கூடியிருக்கும் வேளையில், அது வழங்கும் ஆட்சிமுறை அனுபவங்களை மட்டுமல்லாமல், 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பு, கலந்துரையாடல் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவை இன்றியமையாதவை என்ற பரந்த செய்தியையும் நாம் பாராட்ட வேண்டும்.
அர்த்தமுள்ள விவாதங்களைத் தூண்டுவதோடு, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே அதிகளவிலான கல்வி, கலாசாரம் மற்றும் மக்களுக்கும் மக்களுக்குமிடையேயான பரிமாற்றங்களை ஊக்குவிக்கட்டும்.
எமது இரு நாடுகளினதும் மற்றும் எதிர்கால சந்ததியினரினதும் நலனுக்காக சீனாவுடனான நமது நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன் என்றார்.





