ஜே.வி.பியின் அபிலாஷைகளை அரசு காட்டிக் கொடுத்துவிட்டது - ஹேமமாலி அபேரத்ன
இன்று வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஏகாதிபத்தியவாதிகள் மிகக் கொடூரமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி நிலங்களையும், உழைப்பையும், சந்தையையும் கொள்ளையிட முயற்சிக்கின்றார்கள்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1971 ஆண்டு போராட்டத்தை வழிநடத்திய ஜே.வி.பியின் உறுப்பினர்களைக் கொண்ட இந்த அரசாங்கம், இன்று அந்தப் போராளிகளின் அரசியல் அபிலாஷைகளை முற்றாகக் காட்டிக்கொடுத்துவிட்டதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் விடுதலைக்கான பெண்கள் இயக்கத்தின் அமைப்பாளர் ஹேமமாலி அபேரத்ன குற்றச்சாட்டியுள்ளார்.
‘ஏகாதிபத்தியத்திற்கு அழிவு - சோசலிசத்திற்கு வெற்றி’ எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னிலை சோசலிசக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட 55 ஆவது ஏப்ரல் வீரர் நினைவு தின நிகழ்வானது 05-04-2026 அன்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் முக்கியஸ்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றுகையிலேயே விடுதலைக்கான பெண்கள் இயக்கத்தின் அமைப்பாளர் ஹேமமாலி அபேரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தாம் நசுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியுள்ளார்கள் என்பதே வரலாற்றின் உண்மையாகும். அன்று 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு உயிர் கொடுத்த எமது அன்புச் சகோதர, சகோதரிகள் போராடியது இந்தச் சுரண்டல் பொருளாதார முறைமைக்கு எதிராகவேயாகும். அதனால்தான் 71 போராட்டத்தை ஒரு மகத்தான போராட்டமாக நாம் அடையாளப்படுத்துகின்றோம்.
இன்று வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஏகாதிபத்தியவாதிகள் மிகக் கொடூரமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி நிலங்களையும், உழைப்பையும், சந்தையையும் கொள்ளையிட முயற்சிக்கின்றார்கள்.
இதற்கு ஒரே வழி சோசலிசம் மாத்திரமேயாகும். அதனால்தான் சோசலிசம் அல்லது மரணம் என்று அன்று கியூபா பெருமையுடன் முழங்கியது. இன்று எமது அரசாங்கம் முதுகெலும்பற்ற நிலையில் அமெரிக்காவிற்கு அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கின்றது.
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1971 போராட்டத்தை வழிநடத்திய ஜே.வி.பியின் உறுப்பினர்களைக் கொண்ட இந்த அரசாங்கம், இன்று அந்தப் போராளிகளின் அரசியல் அபிலாஷைகளை முற்றாகக் காட்டிக்கொடுத்துவிட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி இந்த அரசாங்கம் இந்தியாவுடன் இரகசிய ஒப்பந்தங்கள் பலவற்றில் கையெழுத்திட்டது. எமது நாட்டின் பாதுகாப்பு, எரிசக்தி இறையாண்மை மற்றும் இலவச சுகாதார உரிமைகளை அழிக்கும் யோசனைகளே அவற்றில் உள்ளன. மறுபுறம் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. எனவே, மனசாட்சியுள்ள எம்மால் இந்த அநீதியைக் கண்டு மௌனமாக இருக்க முடியாது. அன்று 71 வீரர்கள் சென்ற பாதையில் பயணிக்க நாம் ஒருபோதும் தயங்கப்போவதில்லை என்றார்.





