மருத்துவர்களின் வேலைநிறுத்தம் மக்கள் நலனுக்கு எதிரானது - செவிலியர் சங்கம்
கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமக்கு வேண்டிய முறையில் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களை பெற்று வந்த ஒரு குறிப்பிட்ட குழுவினரின் அதிகாரங்களை தற்போதைய அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மருத்துவர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் முறையற்றது எனவும், இது அப்பாவி பொது மக்களுக்கும், நோயாளிகளுக்கும் எதிரானது என்று அகில இலங்கை செவிலியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி.மெதிவத்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு 05-04-2026 அன்று கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்வரும் புத்தாண்டு விடுமுறைக் காலத்தை முன்னிட்டு, நோயாளிகள் தங்களுக்கு தேவையான மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கும், மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் வரும் நோயாளிகளை இந்த வேலைநிறுத்தம் கடுமையாக பாதிக்கும். மருத்துவர்களின் இந்த தன்னிச்சையான போக்கினால் பொதுமக்களின் சுகாதார உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
மேலும், முன்னெடுக்கடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மீறி சுமார் 96 சதவீதமானோர் புதிய நியமனங்களுக்காக விண்ணப்பித்துள்ளமை தற்போதைய போராட்டத்தின் தோல்வியை காட்டுகிறது. இது பெரும்பான்மையான மருத்துவர்கள் மக்கள் சேவையை முதன்மையாக கருதுவதை காட்டுகிறது.
கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமக்கு வேண்டிய முறையில் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களை பெற்று வந்த ஒரு குறிப்பிட்ட குழுவினரின் அதிகாரங்களை தற்போதைய அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே மீண்டும் ஆதிக்கத்தை நிலைநாட்டவே இத்தகைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய போராட்டங்கள் சாதாரண மக்களின் உயிர்களையே கேள்விக்குறியாக்கும்.
சுகாதாரத் துறையில் நிலவும் குறைகளை தீர்க்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பை வழங்க வேண்டியது பொறுப்புள்ள தொழிற்சங்கங்களின் கடமையாகும். தற்போதைய அரசாங்கம் தொழிசங்க நடவடிக்கைகளை மதிக்க கூடியது என்பதால் குறுகிய இலாபங்களுக்காக போராட்டங்களை முன்னெடுப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் சுகாதார சேவைகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதற்கு செவிலியர் சங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.





