கேரளாவில் வந்தே பாரத் ரயில் திடீரென்று நிறுத்தம்
தொடர்வண்டி ஓட்டுநர் உடனடியாக அவசர வேகமுறிப்பைப் (பிரேக்கு) பயன்படுத்தி அதிவேக தொடர்வண்டியை நிறுத்தினார் என்று இருப்புப்பாதை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அகத்துமுறி தொடர்வண்டி நிலையம் அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி ஓட்டுநர், அங்கே தண்டவாளத்தில் இருந்த ஆட்டோவை செவ்வாய்க்கிழமை இரவு கண்டதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
காசர்கோடு முதல் திருவனந்தபுரம் செல்லும் ரயில், இரவு 10.10 மணியளவில் வர்கலா-கடக்காவூர் பிரிவில் உள்ள அகத்துமுறி நிறுத்தத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, தொடர்வண்டி ஓட்டுநர் சாலை வாகனம் இருப்பதைக் கவனித்தார்.
தொடர்வண்டி ஓட்டுநர் உடனடியாக அவசர வேகமுறிப்பை (பிரேக்கு) பயன்படுத்தி அதிவேக தொடர்வண்டியை நிறுத்தினார் என்று இருப்புப்பாதை அதிகாரிகள் தெரிவித்தனர்.பின்னர் தொடர்வண்டிப் பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகள் ஆட்டோ ஓட்டுநரான சுதி என்பவரைக் கைது செய்தது. அந்த நேரத்தில் மது போதையில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தண்டவாளப் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி இரவு 11.15 மணிக்கு தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது. தாமதமாக இருந்தபோதிலும், தொடர்வண்டி இரவு 11.50 மணிக்கு திருவனந்தபுரம் மத்திய நிலையத்தை அடைந்தது. பயணிகள், தொடர்வண்டி ஊழியர்கள் அல்லது பொதுமக்கள் யாருக்கும் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.





