அட்டன் பிரகடன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - பழனி திகாம்பரம்
2015 காலப்பகுதியில் நான் அமைச்சராக இருந்த போது அந்த மக்களுக்கு 8000 வீடுகளை நிர்மாணித்தோம்.
மலையக மக்கள் காணி உரிமை கோரி வீதிக்கு இறங்கி போராடுவதற்கு முன்னர் அட்டன் பிரகடனத்தில் வழங்கிய காணி மற்றும் வீட்டு உரிமை வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். பெரும்பான்மை பலம் அரசாங்கத்திடம் உள்ளது. மலையக மக்கள் நலன்சார்ந்த தீர்மானங்களை அரசாங்கம் தடையின்றி எடுக்கலாம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-05-2026 அன்று நடைபெற்ற மலையக காணி உரிமை தொடர்பான அவசர சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: மலையக மக்களின் காணி பிரச்சினை நீண்ட கால பிரச்சினையாக இருக்கின்றது. மாறிமாறி வந்த அரசாங்கங்கள் அந்தப் பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வை கொடுக்கவில்லை. 2015 காலப்பகுதியில் நான் அமைச்சராக இருந்த போது அந்த மக்களுக்கு 8000 வீடுகளை நிர்மாணித்தோம். இந்திய அரசாங்கத்தின் நிதியில் 4000 வீடுகளை நிர்மானித்தோம். இதன்படி நல்லாட்சி அரசாங்கத்திலேயே மலையக மக்களுக்கு முதலில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கியுள்ளோம்.
நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுப்பவர்களே எமது மலையக மக்கள். ஆனால் அந்த மக்கள் இன்னும் லயத்து வாழ்க்கையையே வாழ்கின்றனர். இந்த அரசாங்கம் வரும்போது ஹட்டன் பிரகடனத்தில் இந்த மக்களுக்கு வீடுகள் மற்றும் காணி உரிமைகளை வழங்குவோம் என்று கூறியது. ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன அதுபற்றி எதுவும் செய்யவில்லை. சம்பளத்தை அதிகரித்தது. அதன்போது அதற்கு நாங்கள் ஆதரவு வழங்கினோம். எவ்வாறாயினும் இந்த மக்கள் வீதிக்கு இறங்கி போராட முன்னர் காணி உரிமைகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.
200 வருடங்கள் வாழும் இந்த மக்களுக்கு 10 பேர்ச்சர்ஸ் காணிகளை வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. தோட்டங்களில் காணிகள் உள்ளன. அவற்றை கொடுப்பதற்கு எவருக்கும் மனம் வரவில்லை. எங்களை விடவும் எதிர்க்கட்சியில் இருக்கும் போது தற்போதைய ஜனாதிபதி அந்த மக்கள் தொடர்பில் அதிகமாக பேசியுள்ளார். அப்போது அவருக்கு அதிகாரம் இருக்கவில்லை. இப்போது அந்த அதிகாரம் இருக்கின்றது. அதனை செய்தால் நாங்கள் ஆதரவு வழங்குவோம். அதனை விடுத்து நாங்கள் ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம் என்று ஆளுங்கட்சியில் உள்ள மலையக பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.





