அமெரிக்கா- இலங்கை கூட்டு முயற்சியில் அக்கரகம வைத்தியசாலை புனரமைப்பு
வைத்தியசாலையின் கட்டிடக் அமைப்பு, கூரை, மின் மற்றும் நீர் அமைப்புகள், குளிரூட்டும் கருவிகள், மின் உற்பத்தி அமைப்புகள் மற்றும் உட்புற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை விமானப்படை மற்றும் அமெரிக்க விமானப்படை ஆகிய இரண்டு நாடுகளின் கூட்டு ஒத்துழைப்புடன், இலங்கையில் அக்கரகம பிரதேச வைத்தியசாலை புனரமைக்கப்பட்டுள்ளது. சுமார் 40.5 மில்லியன் இலங்கை ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த புனரமைப்புப் பணிகள் இலங்கை பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சுகள், இலங்கை விமானப்படை மற்றும் அமெரிக்க விமானப்படை ஆகியவற்றின் பொறியியலாளர்களின் கூட்டு மேற்பார்வையில் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டன.
இந்தத் திட்டத்திற்கு சுமார் 40.5 மில்லியன் இலங்கை ரூபா ($135,000 அமெரிக்க டொலர்) செலவிடப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கூட்டுப் பங்களிப்பு, உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவு வழங்குவதில் உள்ள அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
வைத்தியசாலையின் கட்டிடக் அமைப்பு, கூரை, மின் மற்றும் நீர் அமைப்புகள், குளிரூட்டும் கருவிகள், மின் உற்பத்தி அமைப்புகள் மற்றும் உட்புற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் 45,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அக்கரகம வைத்தியசாலை, இப்போது ஒன்பது சிறப்புப் பிரிவுகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரும்பாலும் குறைந்த சமூக - பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வைத்தியசாலை ஒரு முக்கியமான வளமாக விளங்குகிறது.
புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கூறுகையில், "வளங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்வதன் மூலம், நாம் முக்கியமான உள்கட்டமைப்பை மேம்படுத்தியதோடு, நமது நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளோம். இன்று நாம் இணைந்து உருவாக்குவது, எதிர்காலத்தின் பகிரப்பட்ட பாதுகாப்புக்கு அடித்தளமிடுகிறது. நமது பங்காளிகள் பாதுகாப்பாக இருக்கும்போது, அமெரிக்காவும் அதிக பாதுகாப்புடன் இருக்கும்" என்று தெரிவித்தார்.
இந்த திட்டம், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பொது நல உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.





